மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பொல்லார்ட் கேப்டன்
மும்பை: சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, கைவிரல் காயம் காரணமாக சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு விலகினார். இந்த நிலையில் அந்த அணிக்கு புதிய கேப்டனாக மேற்கிந்திய தீவுகளின் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

2010-ம் ஆண்டு முதல் மும்பை அணியில் பொல்லார்ட் இடம் பெற்றாலும், இதற்கு முன்பு இந்த தொடரை அவர் வழி நடத்தியதில்லை.
2012-ம் ஆண்டு மும்பை அணிக்கு சாம்பியன்ஸ் கோப்பையை வாங்கித்தந்த கேப்டன் ஹர்பஜன்சிங் மற்றும் 20 ஓவர் உலக கோப்பையை வென்றெடுத்த இலங்கை கேப்டன் மலிங்கா ஆகிய அனுபவ வீரர்கள் மும்பை அணியில் அங்கம் வகித்த போதிலும், பொல்லார்ட்டிடம் கேப்டன் பதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் மேற்கிந்திய தீவுகளில் நடந்த கரீபியன் பிரிமியர் லீக்கில் பொல்லார்ட் தலைமையிலான பார்படோஸ் டிரைடென்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அனுபவமே, அவருக்கு மும்பை அணியின் கேப்டன் பதவி கிடைக்க உதவியிருக்கிறது.


Click it and Unblock the Notifications