20 டாட் பால்.. 2 மெய்டன்.. மிரள வைத்த பிரசித் கிருஷ்ணா.. இங்கிலாந்து ரன் குவிப்புக்கு நடுவே அசத்தல்
லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு முதல் 30 ஓவர்கள் வரை ஒரு விக்கெட் கூட எடுக்காமல் மிகவும் மோசமாகவே இருந்தது. ஆனால், பிரசித் கிருஷ்ணா பந்து வீசிய விதம் வியப்பை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் அவர் தொடர்ந்து 20 பந்துகள் வரை ரன் ஏதும் கொடுக்காமல் டாட் பால்களாக வீசி அசத்தினார். இதில் 2 மெய்டன் ஓவர்களும் அடங்கும்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பிரின்ஸ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும், அர்ஷ்தீப் சிங் மற்றும் குர்னூர் பிரார் ஆகியோரும் அணியில் இருந்ததால், 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்கியது. ஆனால், பும்ரா இல்லாத நிலையில் இந்த வேகப்பந்து கூட்டணியால் இங்கிலாந்து பேட்டிங்கை கட்டுப்படுத்த முடியவில்லை.

பிரசித் கிருஷ்ணா மட்டுமே இங்கிலாந்து தொடக்க வீரர்களான பென் டக்கெட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகியோருக்கு ஓரளவிற்கு அழுத்தம் கொடுத்தார். இவர் வீசிய 4வது ஓவரின் 2வது பந்து முதல் தொடர்ந்து 20 பந்துகள் வரை ரன் ஏதும் கொடுக்காமல் டாட் பால்களாக வீசினார். 4வது ஓவரில் கடைசி 5 பந்துகள், 6வது ஓவர் மற்றும் 8வது ஓவர் மெய்டன், பின்னர் 10வது ஓவரின் முதல் 3 பந்துகள் என வரிசையாக 20 பந்துகளில் ரன் ஏதும் கொடுக்காமல் அவர் ஆதிக்கம் செலுத்தினார்.
ஆனால், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இவரது பந்துவீச்சை நிதானமாகச் சமாளித்து விட்டு, மற்ற இந்திய பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் எளிதாக ரன்களைக் குவித்தனர். பென் டக்கெட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஜோடி 30 ஓவர்கள் வரை விக்கெட் இழக்காமல் விளையாடி முதல் விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தனர். பின்னர், ஆட்டத்தின் 31வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஜேக்கப் பெத்தேல் 93 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


Click it and Unblock the Notifications
