டம்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அறிமுகமான பிரசித் கிருஷ்ணா, முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமான பிரசித் கிருஷ்ணா, இந்திய கிரிக்கெட் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகினார். அதன்பின்னர் கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ரூ.10 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர், அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கியக் காரணமாக இருந்தார். ஆனால் யார் கண்பட்டதோ, காயம் காரணமாக ஓராண்டுக்கும் மேல் ஓய்வில் இருந்தார். இதனால் கடந்த ஐபிஎல் தொடரில் கூட பங்கேற்கவில்லை.

இதன்பின் திருமணமான நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கினார். 140 கி.மீ வேகத்திற்கும் அதிகமாக வீசக்கூடிய பவுலர் என்பதால் ஆசியக் கோப்பைக்கு முன் பிரசித் கிருஷ்ணா தயாராக பிசிசிஐ தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப பிரசித் கிருஷ்ணாவும் பும்ராவுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே அறிமுகம் செய்யப்பட்டார். இந்தப் போட்டியின் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா அசத்தினார். இதையடுத்து 5வது ஓவரை வீசுவதற்காக பிரசித் கிருஷ்ணா அழைக்கப்பட்டார். டி20 கிரிக்கெட்டில் முதல் ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா, அந்த ஓவரின் கடைசி பந்திலேயே டெக்டரை 9 ரன்களில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து 7வது ஓவரை வீச வந்த பிரசித் கிருஷ்ணா, அயர்லாந்து அணியின் அனுபவ வீரரான டாக்ரெல்லை 1 ரன்னில் வீழ்த்தி தரமான கம்பேக்கை கொடுத்தார். இதன் மூலம் 2 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனால் ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் பேக் அப் வேகப்பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.