டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அயர்லாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் ஸ்டெர்லிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களும், சஞ்சு சாம்சன் 40 ரன்களும், ரிங்கு சிங் 38 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து இந்திய அணி தரப்பில் கேப்டன் பும்ரா முதல் ஓவரை வீசினார். அயர்லாந்து அணி தரப்பில் பால்பிர்னி - ஸ்டெர்லிங் இணை களமிறங்கியது. முதல் ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட, அர்ஷ்தீப் சிங் வீசிய 2வது ஓவரில் இரு பவுண்டரிகள் உட்பட 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் பும்ரா அட்டாக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
இதையடுத்து 3வது ஓவரை வீசுவதற்காக பிரசித் கிருஷ்ணா அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 3வது பந்தில் கேப்டன் ஸ்டெர்லிங் டக் அவுட்டாக, கடைசி பந்தில் அதிரடி வீரர் டக்கர் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் அயர்லாந்து அணி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த அதிர்ச்சியில் இருந்து அயர்லாந்து அணியால் மீண்டு வரவே முடியவில்லை.
3 ஓவர்களை வீசிய பிரசித் கிருஷ்ணா வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணாவின் சிறப்பே திட்டத்திற்கேற்ப பந்துவீசும் திறன் தான். அந்த திறமையை இந்தப் போட்டியில் சிறப்பாக வெளிப்படுத்தினார். ஒவ்வொரு வீரருக்கும் என்ன திட்டமோ, அதற்கேற்ப ஃபீல்ட் செட் அமைத்து பந்துகளை வீசினார். இதனால் ஆசியக் கோப்பைத் தொடருக்கான பேக் அப் வேகப்பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
கடந்த 7 மாதங்களாக என்சிஏவில் காயம் காரணமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்த பிரசித் கிருஷ்ணா ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி நிர்வாகிகளின் திட்டத்தில் இருக்கிறார். இதன் காரணமாகவே பிரசித் கிருஷ்ணாவை பரிசோதிக்க அயர்லாந்து டி20 தொடாருக்கான பிசிசிஐ அனுப்பியுள்ளது. முதல் இரு போட்டிகளிலேயே பிரசித் கிருஷ்ணா தனது திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளதால், ஆசியக் கோப்பைக்கான அணியில் இடம்பெறுவார் என்று பார்க்கப்படுகிறது.