IND vs NZ: இந்திய ஒருநாள் அணியில் இருந்து முக்கிய பவுலர் நீக்கம்.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக விலகியுள்ளார். உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவர் இந்தத் தொடரில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வலது கை வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா, தொடை தசைப் பிடிப்பு காயத்திலிருந்து மீண்டு வர தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர உடற்தகுதி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். முழுமையான அளவில் பந்துவீச்சை மீண்டும் தொடங்குவதற்கு அவருக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால் அவர் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவர் முழு உடற்தகுதி பெறும் பட்சத்தில், டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் நோக்கில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3-வது நான்கு நாள் போட்டியில் இந்தியா ஏ அணிக்காகக் களம் இறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், அக்டோபர் 31 அன்று தொடங்கும் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2-வது நான்கு நாள் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக ஆடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி நவம்பர் 4 அன்று நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் சீனியர் அணியுடன் இருப்பார். அதன்பின்னர் நவம்பர் 19 அன்று தொடங்கும் டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் விதமாக அவரும் இந்தியா ஏ அணியில் இணைவார். இதனிடையே ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஆக்லாந்து சென்று ஒருநாள் போட்டிக்கான தீவிர பயிற்சியைத் தொடங்கிவிட்டனர்.
முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கேஎல் ராகுல், அக்சர் படேல், நமன் திர், அன்ஷுல் கம்போஜ், குர்னூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி (முதல் போட்டிக்கு மட்டும்).
கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, திலக் வர்மா, இஷான் கிஷன் (துணை கேப்டன்), அக்சர் படேல், நமன் திர், ஆகிப் நபி, குர்னூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், குமார் குஷாக்ரா, முகமது சிராஜ், யாஷ் தாக்கூர், குல்தீப் யாதவ்.
2-வது நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ஏ அணி: துருவ் ஜூரல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், யஷ் ரத்தோட், ஆர். ஸ்மரன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஷிகர் மோகன், முகேஷ் சவுத்ரி, முகேஷ் குமார், மானவ் சுதர், குமார் குஷாக்ரா.


Click it and Unblock the Notifications

