உலக கோப்பை டி20: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்.. கோஹ்லி, கெயில் மீது எல்லோர் கண்களும்
மும்பை: டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் 2வது அரை இறுதியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் இரண்டாவது அரைஇறுதியில் மோதுகின்றன.
இந்திய அணி அரைஇறுதிக்கு வர முக்கிய காரணம் துணை கேப்டன் விராட் கோஹ்லி தான். நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு எதிராக 55 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 82 ரன்களும் விளாசி அணியை வெற்றிகரமாக கரை சேர்த்தார் கோஹ்லி.
இதுவரை 184 ரன்கள் சேர்த்துள்ள ஐசிசி நம்பர் ஒன் பேட்ஸ்மேனான கோஹ்லியை தவிர்த்து இந்திய அணியில் வேறு யாரும் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

சொதப்பல்ஸ்
தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மா 4 ஆட்டத்தில் 45 ரன்களும், ஷிகர் தவான் 4 ஆட்டத்தில் 43 ரன்களும் எடுத்துள்ளனர். சூப்பர்-10 சுற்றில் ‘பவர்-பிளை'யான முதல் 6 ஓவர்களில் இந்திய அணியின் சராசரி 5.66 ரன் மட்டுமேயாக உள்ளது. காரணம், ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் சொதப்பல்கள்தான். சூப்பர்-10 சுற்றில் மோசமான ரன்விகிதம் கொண்ட அணி இந்தியா தான்.

மும்மூர்த்திகள்
சுரேஷ் ரெய்னாவும் 4 ஆட்டத்தில் 41 ரன்கள்தான் எடுத்துள்ளார். எனவே, முக்கியமான இந்த அரையிறுதி ஆட்டத்திலாவது இம்மூன்று பேரும் பொறுப்பை உணர்ந்து, தேவைக்கு ஏற்ப ஆட வேண்டும்.

யுவராஜ் அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது யுவராஜ்சிங் இடது கணுக்காலில் காயமடைந்தார். எனவே உலக கோப்பை தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இது அணிக்கு சற்று பின்னடைவு என்றபோதிலும் அவருக்கு பதிலாக மனிஷ் பாண்டே அல்லது ரஹானே அணியில் சேர்க்கப்படலாம். ஒரு வேளை ஆல்-ரவுண்டர் தேவை என்று உணர்ந்தால் பவான் நெகி இடம் பெறலாம்.

பிளட்சர் வெளியே
2012ம் ஆண்டு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் சூப்பர்-10 சுற்றில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளை பதம் பார்த்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மோதலில் வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. தசைப்பிடிப்பால் அவதிப்படும் பிளட்சருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் லென்டில் சிமோன்ஸ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்

அதிரடி வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், டேரன் சம்மி, வெய்ன் பிராவோ, ஆந்த்ரே ரஸ்செல் அதிரடி காட்ட கூடியவர்கள். இங்கிலாந்துக்கு எதிராக இதே மைதானத்தில் கெய்ல் 11 சிக்சருடன் 100 ரன்கள் குவித்தார். எனவே அவரை சீக்கிரம் வெளியேற்றினால் தான் வெஸ்ட் இண்டீசை கட்டுப்படுத்த முடியும்.

பேட்டிங் பிட்ச்
மும்பை வான்கடே மைதானம் ‘ரன்மழை'க்கு பெயர் பெற்றது. முந்தைய ஆட்டங்களுடன் ஒப்பிடும்போது இந்த மோதலுக்கு பயன்படுத்தும் ஆடுகளத்தின் தன்மை கொஞ்சம் வேகம் குறைந்து இருக்கலாம். ஆனாலும் பேட்ஸ்மேன்களின் ஜாலமே மேலோங்கி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அனல் பறக்கும்
இரு அணிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான சம பலத்துடன் இருப்பதால் களத்தில் எந்த அணி நெருக்கடியை திறம்பட கையாள்கிறதோ அவர்களின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இரவு போட்டி
டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரை இறுதியில் தோற்றதில்லை. அந்த பெருமையை தக்க வைக்குமா? என்பது இன்று தெரிந்துவிடும். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Click it and Unblock the Notifications