புனே: பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் புனே சூப்பர் ஜியான்ட் அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது குஜராத் லயன்ஸ் அணி.
புனே நகரிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய லீக் ஆட்டத்தில், குஜராத் அணிக்கு எதிராக, டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்ந்தெடுத்தது புனே.

இதையடுத்து முதலில் விளையாடிய குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷான் 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து தாஹிர் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கேப்டன் ரெய்னா 8, ஆரோன் பின்ச் 13, மெக்கல்லம் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளை விளாசி 27 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார். தினேஷ் கார்த்திக் 29 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 19 ரன்களும் எடுத்தனர்.
இதன் பின்னர் 162 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய புனே அணியின் தொடக்க வீரர் ரகானே 4 ரன்களிலும், திரிபாதி 6 ரன்னிலும், கேப்டன் ஸ்மித் 4 ரன்னிலும் வெளியேறினர். 1.3 ஓவரில் 10 ரன்களில் 3 விக்கெட்டை இழந்து திணறியது புனே. அடுத்து வந்த திவாரி டக் அவுட்டானார்.
ஒரு கட்டத்தில் டோணி 33 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் அசராமல் ஆடிய பென் ஸ்டோக்ஸ் குஜராத் பந்துவீச்சை துவைத்து எடுத்தார்.
கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைபட்ட நிலையில் கிறிஸ்டியன் சிக்ஸ் அடித்து புனே அணியை வெற்றி பெறச் செய்தார். 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார் கிறிஸ்டியன். 63 பந்தில் 103 ரன்கள் குவித்த ஸ்டோக்ஸ், 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் விளாசி அவுட்டாகாமல் களத்தில் நின்றார்..