சீனியர் வீரர்களை இப்படியா நடத்துவது? அகார்கருக்கு வார்னிங் தந்த ரஹானே
மும்பை: 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் இடத்தை உறுதி செய்யுமாறு அஜித் அகர்கரிடம் ரஹானே வலியுறுத்தியுள்ளார். ரோஹித் சர்மா போன்ற ஒரு பெரிய வீரரின் பங்களிப்பை ஒவ்வொரு தொடரின் அடிப்படையிலும் மதிப்பிடக் கூடாது என்று ரஹானே தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக, உலகக் கோப்பைக்கான திட்டங்களில் ரோஹித் சர்மா இல்லை என்று தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் அவரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் ரோஹித் 138 ரன்கள் குவித்து அசத்தினார்.

இருப்பினும், அவரைப் பற்றிய விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. 2027 உலகக் கோப்பை ஆப்பிரிக்காவில் தொடங்கும்போது ரோஹித்துக்கு 40 வயதாகியிருக்கும் என்பதால், தேர்வாளர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களைப் பயன்படுத்த ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது.
இது குறித்து பேசிய ரஹானே, "ரோஹித் சர்மாவிடம் அவர் 2027 உலகக் கோப்பையில் விளையாடப் போகிறார் என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். கடந்த பல வருடங்களாக அணியில் அவரது பங்களிப்பு மிகச் சிறப்பாக உள்ளது. எனவே, உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் அவரது அனுபவம் அணிக்குத் தேவை."
"இதுகுறித்த விவாதமே எழக் கூடாது. 'ரோஹித் சர்மா, நீங்கள் விளையாடுகிறீர்கள்' என்று ஒருமுறை கூறிவிட்டால், அவ்வளவுதான். அவர் ஒரு பெரிய வீரர் என்பதால், ஒவ்வொரு தொடரின் அடிப்படையிலும் அவரை நாம் மதிப்பிட முடியாது. ஒரு பெரிய வீரரை நாம் அப்படி நடத்தினால் மட்டுமே அவரது ஆட்டத்திறன் சீராக இருக்கும். கிரிக்கெட் என்பது மனநிலை மற்றும் சீரான ஆட்டத்திறனை பொறுத்தது."
"நீங்கள் எத்தனை போட்டிகளில் விளையாடியிருந்தாலும், அணியில் இளையோராக இருந்தாலும் சரி அல்லது அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும் சரி, மனது நிம்மதியாக இருந்தால் மட்டுமே உங்களால் சிறப்பாக விளையாட முடியும். ரோஹித்தின் தரம் குறித்து நாம் பேச வேண்டிய அவசியமே இல்லை. இதுபோன்ற அனுபவம் அணிக்குத் தேவை. எனவே, அணி நிர்வாகத்திற்கும் கேப்டனுக்கும் இடையே இந்த விவாதம் நடக்கக் கூடாது. அவருக்கு 2027 உலகக் கோப்பையில் விளையாட விருப்பம் இருந்தால், அவர் கண்டிப்பாக விளையாட வேண்டும்," என்று ரஹானே கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications

