Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய டெஸ்ட் அணிக்கு ஆபத்து.. உண்மையை போட்டு உடைத்த ராகுல் டிராவிட்.. எங்கே சறுக்குகிறது இந்தியா?

மும்பை: சமீப காலமாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருகிறது. ஒருபுறம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், பாரம்பரியமான டெஸ்ட் போட்டிகளில், அதுவும் சொந்த மண்ணில் அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவுவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் இந்தச் சரிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மனம் திறந்து பேசியுள்ளார்.

கவுதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராகச் சொந்த மண்ணிலும், ஆஸ்திரேலிய மண்ணிலும் தோல்விகளைச் சந்தித்தது. குறிப்பாகச் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவது அப்பட்டமாகத் தெரிந்தது. விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடங்களை நிரப்ப முடியாமல் இந்தியா தவித்து வருகிறது.

Rahul Dravid Explains India s Test Cricket Decline Training and Hectic Schedules to Blame

பயிற்சி நேரம்

பெங்களூருவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ராகுல் டிராவிட், மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) விளையாடும் வீரர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை விளக்கினார்.

"வீரர்கள் தொடர்ந்து ஒரு தொடரிலிருந்து மற்றொரு தொடருக்கு மாறிக்கொண்டே இருக்கிறார்கள். பல சமயங்களில் ஒரு டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்புதான் வீரர்கள் அணியுடன் இணைகிறார்கள். அப்போது பயிற்சியைத் தொடங்கும்போதுதான் தெரியும், அவர்களில் பலர் சிவப்பு பந்தை தொட்டுப் பார்த்து 4 அல்லது 5 மாதங்கள் ஆகியிருக்கும் என்பது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவப்பு பந்தில் விளையாடுவது மிகக் கடினம்" என்று டிராவிட் வேதனை தெரிவித்தார்.

என் காலத்தில் இப்படி இல்லை

தற்போதைய சூழலைத் தனது காலத்தோடு ஒப்பிட்டுப் பேசிய அவர், "எனது காலத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மட்டுமே இருந்தன. ஐபிஎல் போன்ற லீக் போட்டிகள் இல்லை. அதனால் ஒரு டெஸ்ட் தொடர் வருவதற்கு முன்பு, என்னால் ஒரு மாதம் முழுவதும் சிவப்பு பந்தில் பயிற்சி செய்ய முடியும். சுழற்பந்து வீச்சை எப்படிச் சமாளிப்பது, பந்து ஸ்விங் ஆகும்போது எப்படி ஆடுவது என்பதை மணிக்கணக்கில் பயிற்சி செய்து கற்றுக்கொள்ள நேரம் இருந்தது.

ஆனால் இன்றுள்ள சூழலில் அந்த நேரம் வீரர்களுக்குக் கிடைப்பதில்லை. சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் திறமையை வளர்த்துக்கொள்ள நீண்ட நேரப் பயிற்சி அவசியம். அது இல்லாததுதான் தற்போதைய சறுக்கலுக்கு முக்கிய காரணம்" என்று விளக்கினார்.

சுப்மன் கில் நிலைமை

மூன்று வடிவங்களிலும் விளையாடுவது எவ்வளவு கடினம் என்பதற்குச் சுப்மன் கில்லை உதாரணமாகக் காட்டினார் டிராவிட். "சுப்மன் கில் தற்போது மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடி வருகிறார். குறுகிய காலத்தில் வடிவங்களை மாற்றிக்கொண்டு, டெஸ்ட் கிரிக்கெட்டிற்குத் தன்னை தயார்படுத்திக்கொள்வது எவ்வளவு சிரமம் என்பதை அவர் இப்போது நன்றாக உணர்ந்திருப்பார்" என்று டிராவிட் குறிப்பிட்டார்.

இந்திய டெஸ்ட் அணியில் நடுவரிசையில் சாய் சுதர்சன், கருண் நாயர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும், அவர்களால் இன்னும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. நவீன கிரிக்கெட்டின் அட்டவணை நெருக்கடியால் டெஸ்ட் கிரிக்கெட் தரம் பாதிக்கப்படுவதையே டிராவிட்டின் பேச்சு உணர்த்துகிறது.

Story first published: Thursday, January 29, 2026, 11:42 [IST]
Other articles published on Jan 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+