“எங்களுக்கு துரோகம் நடந்துவிட்டது”.. சட்ட சிக்கலில் ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனை.. அமெரிக்க நிறுவனம்
மும்பை: ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகையான 15,660 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்கப்பட்ட செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, அந்த ஒப்பந்தத்தில் ஒரு மிகப்பெரிய சட்டச் சிக்கல் உருவாகியுள்ளது. ஒருபுறம் லட்சுமி மிட்டல் குடும்பத்தினர் அணியைக் கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இருக்க, மறுபுறம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் "எங்களுக்குத் துரோகம் செய்யப்பட்டுவிட்டது" என்று கூறி நீதிமன்றக் கதவுகளைத் தட்டத் தயாராகி வருகிறது. இந்த விவகாரம் பிசிசிஐ வரை செல்ல வாய்ப்புள்ளதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் மாற்றம் இப்போது ஒரு பெரிய மர்மமாக மாறியுள்ளது.
லட்சுமி என் மிட்டல், ஆதித்ய மிட்டல் மற்றும் அதார் பூனாவாலா ஆகியோர் அடங்கிய கூட்டணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1.87 பில்லியன் டாலர் (சுமார் 15,660 கோடி ரூபாய்) மதிப்பிற்கு வாங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதே விலைக்கு அந்த அணியை வாங்க ஏற்கனவே கல் சோமானி தலைமையிலான அமெரிக்க நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இறுதிக்கட்டத்தை எட்டிய அந்த ஒப்பந்தத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் திடீரென ரத்து செய்துவிட்டு, மிட்டல் குடும்பத்துடன் கைகோர்த்ததுதான் இப்போது பிரச்சனையாக வெடித்துள்ளது.

தங்களுக்கு அநியாயம் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறும் கல் சோமானி தரப்பு, இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயாராகிவிட்டது. இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள சட்ட நிபுணர்களுடன் அவர்கள் ஆலோசனையைத் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திற்கு இது தொடர்பான சட்ட நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. தங்களுக்குச் சொந்தமான நிதியைத் திரட்டி ஒப்பந்தத்தை முடிக்கக் காத்திருந்தும், ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் வேண்டுமென்றே காலதாமதம் செய்துவிட்டு ரகசியமாக மிட்டல் குடும்பத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஒப்பந்தம் முறிந்ததற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட காலத்திற்குள் நிதியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை சோமானி தரப்பு மீறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சோமானி தரப்போ தங்களிடம் பணத்திற்குப் பஞ்சமே இல்லை என்றும், வால்டன் (வால்மார்ட் நிறுவனத்தின் உரிமையாளர்கள்) மற்றும் ஹம்ப் போன்ற பெரும் கோடீஸ்வரக் குடும்பங்கள் தங்களுக்குப் பின்னால் இருந்ததாகவும் கூறுகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம்தான் ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் வேண்டுமென்றே இழுத்தடித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்போதைய உரிமையாளர் மனோஜ் படாலே அணியின் நிர்வாகத்தில் நீடிப்பதை சோமானி தரப்பு விரும்பவில்லை. ஆனால், மிட்டல் குடும்பத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் மனோஜ் படாலே முக்கியப் பொறுப்பில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவே ஒப்பந்தம் மாற முக்கியக் காரணம் எனத் தெரிகிறது. இந்தச் சட்டப் போராட்டம் தீவிரமடைந்தால், பிசிசிஐ இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய சூழல் உருவாகும். 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வரும் வேளையில், இந்தச் சட்டச் சிக்கல் அணி நிர்வாகத்துக்கு ஒரு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications