மெகா ஐபிஎல் டீல்.. 15,660 கோடி ரூபாய்க்கு கைமாறிய ராஜஸ்தான் ராயல்ஸ்.. புதிய உரிமையாளர்கள் யார்?
மும்பை: ஐபிஎல் தொடரின் 2026 சீசன் நடைபெற்று வரும் வேளையில், கிரிக்கெட் உலகையே வியக்க வைக்கும் ஒரு மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் அரங்கேறியுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சுமார் 15,660 கோடி ரூபாய்க்கு கைமாறியுள்ளது. உலகின் மிகப்பெரிய இரும்புத் தொழில் அதிபரான லட்சுமி என். மிட்டல் குடும்பத்தினர் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓ அதார் பூனாவாலா ஆகியோர் இணைந்து இந்த அணியை வாங்கியுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் உரிமையாளர்கள் வட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த மார்ச் மாதம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 1.78 பில்லியன் டாலர் (16,600 கோடி ரூபாய்) மதிப்பிற்கு ஆதித்ய பிர்லா குழுமத்தால் வாங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த 15,660 கோடி ரூபாய் (1.7 பில்லியன்) ஒப்பந்தத்தின்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 75 சதவீத பங்குகளை மிட்டல் குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். அதார் பூனாவாலா 18 சதவீத பங்குகளைப் பெற்றுள்ளார். மீதமுள்ள 7 சதவீத பங்குகள் மட்டும் அந்த அணியின் பழைய உரிமையாளரான மனோஜ் படாலே வசம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை வெறும் ஐபிஎல் அணியுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் தென்னாப்பிரிக்காவின் பார்ல் ராயல்ஸ் மற்றும் கரீபியன் தீவுகளின் பார்படாஸ் ராயல்ஸ் ஆகிய அணிகளும் இந்த புதிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன. இந்த மெகா டீல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த உரிமையாளர் மாற்றம் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சுமி மிட்டல் ராஜஸ்தான் மாநிலத்தின் சாதுல்பூர் கிராமத்தில் பிறந்தவர் என்பதால், தனது சொந்த மாநில அணியை வாங்குவதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். சிறுவயது முதலே கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பகுதியாக மாறுவது தமக்குக் கிடைத்த பெருமை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவரது மகன் ஆதித்ய மிட்டல் மற்றும் மகள் வனிஷா மிட்டல் ஆகியோரும் இந்த அணியின் நிர்வாகக் குழுவில் இணையவுள்ளனர்.
நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் பலமாகத் திகழ்கிறது. 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட திறமையான வீரர்களுடன் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பும் அந்த அணிக்கு பிரகாசமாக உள்ளது. இத்தகைய சூழலில், புதிய உரிமையாளர்களின் வருகை ராஜஸ்தான் அணிக்கு நிதி ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் இன்னும் கூடுதல் பலத்தைச் சேர்க்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது ஐபிஎல் தொடரின் மதிப்பையும் உலக அளவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications