மும்பை : அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தும் முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா, எம் எஸ் தோனி, விராட் கோலி ஆகியோர் அந்த விழாவிற்கு செல்லவில்லை.
இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் பெரும் சாதனையாக முன்னிறுத்தப்படும் ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்ததால் அவர்கள் மூவரும் வரும் காலத்தில் தங்கள் கிரிக்கெட் எதிர்காலத்திலும், பொருளாதார ரீதியாகவும் சட்ட சிக்கலை சந்திப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரோஹித் சர்மா ஏற்கனவே கிரிக்கெட்டில் தன் இறுதிக் காலத்தில் இருப்பதால் ஐபிஎல் தொடரில் இரண்டாம் கட்ட நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். தோனிக்கு சில சட்ட சிக்கல்கள் உள்ளன. இந்த நிலையில் அவர்கள் இருவரும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்லாதது அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு குறிப்பிட்ட பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. கிரிக்கெட்டில் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இவர்களில் ரோஹித் சர்மா, விராட் கோலி., தோனி, கபில் தேவ் ஆகியோர் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லவில்லை. விராட் கோலி முதலில் அயோத்தி செல்ல தயாராக இருந்ததாகவும், அவரது குடும்பத்தில் ஒரு அவசரநிலை ஏற்பட்டதால் அவர் கடைசி நேரத்தில் பயிற்சி முகாமில் இருந்து தன் வீட்டுக்கு விரைந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், அவருக்கு எந்த சிக்கலும் ஏற்படாது என கருதப்படுகிறது.
ஆனால், ரோஹித் சர்மா, தோனி மீது பாஜக தரப்பு கோபத்தில் இருக்கக்கூடும் என சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. ரோஹித் சர்மாவுக்கு ஐபிஎல் தொடரில் சமீபத்தில் தான் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. தோனி மீது சில நாட்கள் முன்பு அவதூறு வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்கள் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லாததன் மூலம், அவர்களுக்கு மேலும் சிக்கல்கள் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.