குஜராத் : இந்திய கிரிக்கெட் அணியில் புதிய ஆல்ரவுண்டர்கள் இல்லாமல் பல கேப்டன்கள் தடுமாறி இருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியாவுக்கு பிறகு யார் இருக்கிறார் என்ற கேள்வி இன்னும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டால் வேறு ஒரு ஆல்ரவுண்டர் கிடைக்காமல் இந்தியா தடுமாறி வருகிறது.
நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் கூட இந்திய அணி ஆல்ரவுண்டர் இல்லாமல் தடுமாறியது. இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் அணியில் தற்போது ஒரு ஆல்ரவுண்டர் இடம் பிடித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது, கடந்த 10 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஆனால் கடந்த சில தொடர்களாக தான் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழக அணியின் முக்கிய வீரராக விளங்குகிறார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான முஹமது, பந்துவீச்சில் போர் குதிரை போல் கடுமையாக உழைத்து விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய வீரராக திகழ்கிறார்.
சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் எவ்வளவு வேகமாக பந்து வீசி விக்கெட் எடுக்க சொன்னாலும் கொஞ்சம் கூட தயக்கம் காட்டாமல் செய்வார். இந்த நிலையில் முஹமது தற்போது பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது குஜராத்துக்கு எதிரான முதல் ரஞ்சி ஆட்டத்தில் தமிழக அணி 101 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறிய போது களத்திற்கு வந்தார்.
முதல் இன்னிங்ஸ் குஜராத்தை விட கூடுதல் ரன்கள் எடுத்தால்தான் போட்டி டிராவானாலும் தமிழக அணிக்கு கூடுதல் புள்ளிகள் கிடைக்கும். 100 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது முஹமது அபாரமாக பந்தை தூக்கி அடித்தார். வீசுகின்ற பந்தை எல்லாம் பவுண்டரி, சிக்ஸர் என அடித்த முகமது, அடிக்க முடியாத பந்துகளை ஒரு பேட்ஸ்மேன் போல் லீவ் செய்து தன்னுடைய ஷார்ட்களை அறிவுப்பூர்வமாக தேர்வு செய்தார்.
இதன் மூலம் 99 பந்துகளில் முகமது 85 ரன்கள் சேர்த்தார். இதில் 11 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் தமிழக அணி முதல் இன்னிங்சில் 14 ரன்கள் கூடுதல் பெற்று முன்னிலை பெற்றனர். ஏற்கனவே பந்துவீச்சில் முஹமது ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனால் முகமது ஒரு நல்ல ஆல் ரவுண்டராக திகழ்கிறார் என்றும் இவரை இந்திய அணியில் விரைவில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.