இதுக்கும் ரோஹித் தான் காரணம்.. பொளந்து கட்டிய ரசிகர்கள்.. கத்துக்குட்டி டீமிடம் அடி வாங்கிய மும்பை
மும்பை: ரஞ்சி டிராபி போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்ற நிலையில் அவரது அணியான மும்பை 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் அணியிடம் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதற்கு காரணம் ரோஹித் சர்மா தான் என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்து உள்ளது.
சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மிக மோசமாக இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இருந்து அவர் தாமாகவே விலகினார். அத்துடன் அவர் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெறுவதில் உறுதியாக இருந்தார்.

அதே சமயம் இனி அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் தான் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்து இருந்தது. இதை அடுத்து ரோஹித் சர்மா ரஞ்சித் டிராபி தொடரில் மும்பை அணியில் இடம் பெற்று ஆடினார்.
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ரஞ்சி டிராபி போட்டியில் இடம் பெற்றார். அவர் பங்கேற்ற போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பை அணி ஆடியது. முதலில் ரோஹித் சர்மா 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் சில சிக்ஸர்களை பறக்க விட்டாலும் 23 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்.
முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 120 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி இருந்தது. ஷர்துல் தாக்குர் மட்டுமே சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து இருந்தார். அடுத்து ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி 206 ரன்கள் எடுத்தது. அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய அளவில் ஸ்கோர் குவிக்க வேண்டிய நிலையில் மும்பை அணி 290 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பினர். எட்டாம் வரிசை வீரரான ஷர்துல் தாக்குர் 119 ரன்கள் சேர்த்தார். பத்தாம் வரிசையில் இறங்கிய தனுஷ் கோட்டியான் 65 ரன்கள் எடுத்தார். அவர்கள் ஆட்டத்தால் மட்டுமே மும்பை அணி கவுரவமான ஸ்கோரை எடுத்தது.
ஜம்மு காஷ்மீர் அணிக்கு 207 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை ஜம்மு காஷ்மீர் அணி எளிதாகவே எட்டியது. ரஞ்சி டிராபி வரலாற்றில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை அணி ஜம்மு காஷ்மீர் அணியிடம் தோல்வி அடைந்தது. இதற்கு ரோஹித் சர்மா தான் காரணம் என பலரும் அவரை விளாசி வருகின்றனர்.
மும்பை அணியில் இந்த ஆண்டு இடம்பெற்று இருந்த 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே துவக்க வீரராக அதிக ரன்களை சேர்த்து இருந்தார். ஆனால், ரோஹித் சர்மா அணியில் இடம் பெற்றதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதை சுட்டி காட்டி ரோஹித் சர்மாவுக்கு பதிலாக நன்றாக ஆடும் இளம் வீரரை ஆட வைத்திருந்தால் மும்பை அணி வெற்றி பெற்று இருக்கக் கூடும் என விமர்சித்து வருகின்றனர். இனி ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பது கடினமே.


Click it and Unblock the Notifications