மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சித்தேஷ் லாட் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்த அவர், ஒரே ரஞ்சி தொடரில் ஐந்து சதங்கள் அடித்த மும்பை வீரர்கள் என்ற பெருமைமிக்க பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்துள்ளார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 90 ஆண்டுகளில், ஒரு குறிப்பிட்ட தொடரில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்த வீரர்கள் மிகவும் குறைவு. இதுவரை 26 வீரர்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

மும்பை அணியைப் பொறுத்தவரை, 1944-45 ஆம் ஆண்டில் ரூசி மோடி இந்தச் சாதனையை முதன்முதலில் நிகழ்த்தினார். அதன் பிறகு 1994-95 ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் ஒரே தொடரில் 5 சதங்கள் விளாசினார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சித்தேஷ் லாட் அந்தப் பட்டியலில் மூன்றாவது வீரராக இணைந்து மும்பை கிரிக்கெட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 221 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய சித்தேஷ் லாட் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டார்.
178 பந்துகளைச் சந்தித்த அவர் 12 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இது இந்த ரஞ்சித் தொடரில் அவர் அடிக்கும் நான்காவது தொடர்ச்சியான சதமாகும். இவருக்குத் துணையாக சுவேத் பார்கர் 53 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 6வது விக்கெட்டிற்கு 130 ரன்கள் குவித்தது. ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்து, டெல்லியை விட 45 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
சாதனை குறித்துப் பேசிய சித்தேஷ் லாட், "இந்திய அணிக்காக விளையாடுவது தான் எனது லட்சியம். ஆனால் தற்போது எனது முழு கவனமும் மும்பை அணிக்காகச் சிறப்பாக விளையாடுவதில் தான் உள்ளது. இடையில் கோவா அணிக்காக விளையாடிவிட்டு மீண்டும் மும்பை திரும்பியுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்த கிரிக்கெட் சங்கத்திற்கு வெற்றியைத் தேடித்தர விரும்புகிறேன்" என்று கூறினார்.
சித்தேஷ் லாட்டின் தந்தை தினேஷ் லாட், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷர்துல் தாக்கூர் போன்ற முன்னணி வீரர்களுக்குப் பயிற்சியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. "எனது தந்தையின் பெயர் எனக்குப் பெருமையே தவிர, அது எனக்கு எந்த அழுத்தத்தையும் தரவில்லை. அவர் எனக்கு அழுத்தம் கொடுத்ததே இல்லை" என்று சித்தேஷ் லாட் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஏற்கனவே, டெஸ்ட் அணியில் பங்கேற்க வேண்டி பல உள்ளூர் வீரர்கள் காத்திருப்பில் உள்ளனர். அந்தப் பட்டியலில் சித்தேஷ் லாட் பெயரும் இணைந்து உள்ளது.