திண்டுக்கல்லில் "புதுமாப்பிளைகள்" தினேஷ் கார்த்திக், ஹர்பஜன்சிங்.... ரஞ்சி போட்டியில் மல்லுகட்டு!!
திண்டுக்கல்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்றுப் போட்டிகளில் திண்டுக்கல்லில் தமிழகம் மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. இதில் தமிழகம் அணியில் புதுமாப்பிள்ளை தினேஷ் கார்த்திக்கும் பஞ்சாப் அணியில் மற்றொரு புதுமாப்பிள்ளை ஹர்பஜன்சிங்கும் களமாடுகின்றனர்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9வது லீக் மற்றும் இறுதி சுற்றுப் போட்டிகள் இன்று நாடு முழுவதும் பல்வேறு மைதானங்களில் நடைபெறுகின்றன. இதில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழகம் மற்றும் பஞ்சாப் அணிகள் திண்டுக்கல்லில் மோதுகின்றன.

தமிழக டீம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள "என்.பி.ஆர்." கல்வி குழும மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. தமிழக அணியில் தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது ஆகியோர் விளையாடுகின்றனர்.

பஞ்சாப் அணியில் யுவி, ஹர்பஜன்
பஞ்சாப் அணியில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பி பிரிவில் 18 புள்ளிகளுடன் 5வது இடத்தில் தமிழக அணி உள்ளது. பஞ்சாப் அணியோ 20 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. ஆகையால் இன்றைய போட்டி தமிழகத்துக்கு வாழ்வா சாவா என்ற நிலையாகும்.

புது மாப்பிள்ளைகள்
இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக தினேஷ் கார்த்திக், ஹர்பஜன்சிங், யுவராஜ்சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் திண்டுக்கல்லில் முகாமிட்டுள்ளனர். தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோருக்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது.

மலர்தூவி விளையாட்டு
எதிர் எதிரணியில் மல்லுகட்டும் இருவரும் திண்டுக்கல்லில் என்.பி.ஆர். கல்லூரியில் நடைபெற்ற 'பெவிலியன்' திறப்பு விழாவில் நேற்று பங்கேற்றனர். பின்னர் இருவரும் சிறிதுநேரம் தனியே உட்கார்ந்து பேசிக் கொண்டே மாறி மாறி மலர்களை தூவி விளையாடிக் கொண்டிருந்தனர்... இவர்களோடு அவ்வப்போது யுவராஜ்சிங்கும் சேர்ந்து கொண்டார்.
கல்யாண வாழ்க்கை அவ்வளவு சுவாரசியமோ?


Click it and Unblock the Notifications