மும்பை: சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வந்ததோடு, எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காத ஒரு அமைதியான ஆளுமையாகவே கிரிக்கெட் உலகம் அவரை அறியும். 25 ஆண்டுகள் நீண்ட தனது கிரிக்கெட் பயணத்தில், 'மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின்' தனது நிதானத்தை இழந்த தருணங்கள் மிக மிகக் குறைவு.
ஆனால், 18 வயது இளம் வீரராக இருந்தபோது, சச்சின் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக வாய் வார்த்தைகளில் பதிலடி கொடுக்கத் தயாரானார் என்றும், அப்போது அவருடன் பேட்டிங் செய்துகொண்டிருந்த ரவி சாஸ்திரி அவரைத் தடுத்து நிறுத்தினார் என்றும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வெளியாகி உள்ளது. ரவி சாஸ்திரியே இதை பகிர்ந்துள்ளார்.

இந்தச் சம்பவம் 1991 - 92 இல் சச்சினின் முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், சிட்னி டெஸ்ட் போட்டியில் நடந்துள்ளது. அந்தப் போட்டியில் சச்சின் சதம் அடித்ததோடு, ரவி சாஸ்திரி இரட்டைச் சதம் விளாசி அசத்தினார். ரவி சாஸ்திரி அந்தப் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
"சிட்னி மைதானத்தில் நடந்த அந்தப் போட்டி எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது சச்சினின் முதல் ஆஸ்திரேலியப் பயணம். நான் அப்போதுதான் சதம் அடித்திருந்தேன், சச்சின் பேட்டிங் செய்யக் களத்திற்கு வந்தார். அப்போது வாக் சகோதரர்களான ஸ்டீவ் மற்றும் மார்க் வாக், 'ஏய் குள்ளா... அது இது' என்று அவரை வம்புக்கு இழுத்தனர். அப்போது 12வது வீரரான மைக் விட்னி மைதானத்திற்கு வந்தார். நான் சதம் அடிக்கும் வரை, நானும் ஆலன் பார்டரும் வார்த்தைகளால் மோதிக்கொண்டிருந்தோம்" என்று கூறினார் சாஸ்திரி.
அப்போது நடந்த ஒரு சம்பவத்தை விவரித்த சாஸ்திரி, "மைக் விட்னி பந்தைக் கையில் எடுத்துக்கொண்டு, 'உன் க்ரீஸுக்குள் போ, இல்லையென்றால் உன் தலையை உடைத்துவிடுவேன்' என்றார். நான் உடனே திரும்பினேன். அப்போது மைக்கில் பேசினால் அபராதம் விதிப்பார்கள். ஆனாலும், மைதானத்தின் நடுவில் இருந்து சிட்னி மைதானமே கேட்கும் அளவுக்குக் கத்தினேன், 'ஏய் மைக்! நீ பந்துவீசுவதைப் போலவே நன்றாக எறியவும் தெரிந்திருந்தால், நீ ஆஸ்திரேலியாவின் 12வது வீரராக இருந்திருக்க மாட்டாய்' என்றேன். அதோடு அவர் பேசவில்லை" என்றார்.
ரவி சாஸ்திரி ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பதிலடி கொடுப்பதைப் பார்த்த இளம் சச்சினுக்கும், தானும் அவர்களை வம்பிழுக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. "சச்சின் என்னிடம் வந்து, 'இருங்க, நானும் சதம் அடித்த பின் அவர்களில் சிலருக்கு பதிலடி கொடுக்கிறேன்' என்றார். நான் உடனே சச்சினிடம், 'நீ வாயை மூடு. உன்னிடம் போதுமான திறமை இருக்கிறது; உன் பேட் பேசும். பேசும் வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று சொன்னேன்" என ரவி சாஸ்திரி கூறினார்.
மேலும், "நான் 100-லிருந்து 200 ரன்கள் அடிக்கும் வரை ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஆனால் ஆட்டம் முடிந்ததும், அவர்கள்தான் எங்கள் டிரெஸ்ஸிங் ரூமிற்கு பியருடன் வந்த முதல் ஆட்கள். களத்தில் கடுமையாக விளையாட வேண்டும். போட்டி மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். அதைத்தான் ரசிகர்களும், வீரர்களும் எதிர்பார்க்கிறார்கள்" என்று ரவி சாஸ்திரி மேலும் தெரிவித்தார்.
ரவி சாஸ்திரி சொன்னது போலவே, சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் தனது பேட்டால் மட்டுமே பேசினார். குறிப்பாக, தனது காலகட்டத்தின் மிகச் சிறந்த அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து மொத்தம் 6707 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.