ரோஹித் - கம்பீர் கேமரா முன் ஒன்றாக சிரித்த விஷயமே வேற.. வீடியோ குறித்து அஸ்வின் அதிரடி விளக்கம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மைதானத்தில் இருவரும் சிரித்துப் பேசும் வீடியோக்கள் வெளியானது. ஆனால், இந்த சிரிப்பு எல்லாமே வீடியோ எடுக்கிறார்கள் என தெரிந்து செய்வது என சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி இருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது கம்பீரும் ரோஹித்தும் ஜாலியாக சிரித்துப் பேசுவது போன்ற வீடியோக்கள் பரவின. ரோஹித் சர்மா கம்பீரால் ஓரங்கட்டப்படுகிறார் என செய்திகள் வெளியான மறுநாளே இந்த வீடியோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வந்தன. இதை வைத்து இருவருக்கும் இடையே எல்லாம் சரியாகிவிட்டது என்று ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால், அது உண்மை இல்லை என அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "அங்கு இருப்பவர்கள் அனைவரும் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள். தங்களுக்கு முன்னால் கேமராக்கள் இருப்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள். கேமராவுக்கு முன்னால் யாரும் குழந்தைகளைப் போல சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்கள்" என்றார். இதன் மூலம் அந்த சிரிப்பு என்பது கேமரா முன் செய்யப்படும் ஒரு நடிப்பு மட்டுமே என சூசகமாக கூறி இருக்கிறார் அஸ்வின்.
மேலும் பேசிய அஸ்வின், "ஒரு தொழில்முறை சூழலில் சண்டை போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இருவருக்கு இடையே சுமுகமான உறவு இல்லை என்றால், அவர்கள் குறைவாக பேசிக் கொள்வார்களே தவிர சண்டை போட மாட்டார்கள். வீண் மோதல்களைத் தவிர்ப்பதே நல்லது, அல்லவா? நீங்கள் மைதானத்தில் சிறப்பாகச் செயல்பட்டால் உங்களை யாரால் தடுக்க முடியும்? விராட் கோலி ரன் குவிக்கிறார், ரோஹித் சதம் அடிக்கிறார், தங்களது கடமையைச் செய்கிறார்கள். அதற்கு மேல் யாரால் என்ன சொல்ல முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு இடையேயான உறவிலும் விரிசல் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பொதுவெளியில் அவர்கள் நட்பாக இருப்பது போன்ற புகைப்படங்கள் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. 2026ல் கோலி நல்ல ஃபார்மில் உள்ளார். அதே போல லார்ட்ஸில் ரோஹித் அடித்த 138 ரன்கள் அவருக்கு இன்னும் சில காலம் அணியில் வாய்ப்பைப் பெற்றுத்தரும்.
ஆனாலும், 2027 உலகக் கோப்பைக்கு முன் அணியில் இருந்து நீக்கப்படுவதைத் தவிர்க்க இருவரும் தங்களது சிறந்த ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications

