Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2019 ஐபிஎல்-இல் கதிகலங்க வைத்த அஸ்வின்..கொந்தளித்த இங்கிலாந்து வீரர்கள்.. என்ன நடந்தது?

சென்னை: இந்திய கிரிக்கெட்டின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானும், கிரிக்கெட் உலகின் "பேராசிரியர்" என்று முன்னாள் வீரர்களால் வர்ணிக்கப்படுபவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அவர் ஏற்படுத்திய மிகப்பெரிய சர்ச்சைகளில் ஒன்றான 'மன்கட்' விக்கெட்டை கிரிக்கெட் உலகம் மீண்டும் அசைபோடத் தொடங்கியுள்ளது.

ஐபிஎல் விளையாட்டு உலகம் முழுவதும் பார்க்கப்படும் கிரிக்கெட் தொடராக இருப்பதற்கு இந்த சம்பவமும் ஒரு காரணமாக அமைந்தது. அஸ்வின் ஏற்படுத்திய அந்த சர்ச்சையால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்த நாடுகளில் ஐபிஎல் குறித்த பேச்சு அதிகரித்தது.

Ravichandran Ashwin IPL Retirement A Look Back at the Mankad Controversy

ஐபிஎல் 2019: கிரிக்கெட் உலகை உலுக்கிய அந்த தருணம்!

2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ஜெய்ப்பூரில் நடந்த போட்டி அது. பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின் பந்துவீச வந்தார். அப்போது நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஜாஸ் பட்லர், பந்துவீசப்படுவதற்கு முன்பாகவே கிரீஸை விட்டு வெளியேறினார்.

இதனை கூர்மையாக கவனித்த அஸ்வின், பந்துவீச்சை பாதியில் நிறுத்தி, நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த ஸ்டம்பை பெயர்த்து ரன் அவுட்டிற்கு (மன்கட்) அப்பீல் செய்தார். கள நடுவர் மூன்றாவது நடுவரிடம் ஆலோசிக்க, ஜோஸ் பட்லர் கிரீஸுக்கு வெளியே இருந்தது தெளிவாகத் தெரிந்தது.

இதையடுத்து, ஜோஸ் பட்லருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இந்த ஒரு விக்கெட், அந்தப் போட்டியின் போக்கையே மாற்றியது. 43 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்ததால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதியில் தோல்வியைத் தழுவியது.

வெடித்த மன்கட் சர்ச்சை

அஸ்வினின் இந்தச் செயல், கிரிக்கெட் உலகை இரண்டாகப் பிரித்தது. ஒரு தரப்பினர், "கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டுத்தான் அஸ்வின் அவுட் செய்தார். பந்துவீசும் முன்பே பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியேறுவது தவறு. எனவே, இது சரியானதே" என்று அஸ்வினுக்கு ஆதரவாக வாதாடினர்.

மறுபுறம், ஷேன் வார்ன் போன்ற பல முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள், "இது விதிகளின்படி சரியாக இருந்தாலும், 'விளையாட்டு ஸ்பிரிட்' (Spirit of the Game) என்பதற்கு எதிரானது. ஒரு பந்துவீச்சாளர் இப்படிச் செய்வது அசிங்கமானது" என்று கடுமையாக விமர்சித்தனர்.

அஸ்வின் மற்றும் பட்லர் இடையே களத்திலேயே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களிலும், கிரிக்கெட் அரங்கிலும் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியது. மூத்த இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஆண்டர்சன் அஸ்வின் பெயரை எழுதிய காகிதத்தை சுக்கு நூறாக கிழித்து எறிந்து தனது எதிர்ப்பை தெரிவித்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகள் பெரிய எதிர்பார்ப்பு, சுறுசுறுப்பு இன்றி மந்தமாக சென்ற நிலையில் அஸ்வின் செய்த இந்த சர்ச்சை உலகையே ஐபிஎல் தொடரை நோக்கி திருப்பியது. அதன்பின் அஸ்வின் ஆடிய போட்டிகளில் அவர் செயல்பாட்டை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உற்று நோக்கி விமர்சிக்கத் தொடங்கினர்.

விதிகளும் விவாதங்களும்:

'மன்கட்' என்பது அதிகாரப்பூர்வமாக 'ரன் அவுட்' என்றே அழைக்கப்படுகிறது. பந்துவீச்சாளர் பந்தை வீசுவதற்கு முன்பாக நான்-ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியேறினால், அவரை ரன் அவுட் செய்வது விதிகளின்படி சரியானதுதான். இருப்பினும், இது நேர்மையான ஆட்டத்திற்கு எதிரானது என்ற கருத்து நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

ஆனால், அஸ்வின் எப்போதுமே தனது செயலுக்கு உறுதியாக நின்றார். "நான் விதிகளின்படியே நடந்துகொண்டேன். இதில் எந்தத் தவறும் இல்லை. பேட்ஸ்மேன் நியாயமற்ற முறையில் ஆதாயம் தேடுவதை அனுமதிக்க முடியாது" என்று பலமுறை விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கங்களால் அவர் கிரிக்கெட் விதிகளை கரைத்து குடித்த "பேராசிரியர்" என்று இந்திய ரசிகர்கள் புகழ்ந்தனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கிரிக்கெட் விதிகளை உருவாக்கும் எம்சிசி (MCC), இந்த வகை அவுட்டை அதிகாரப்பூர்வமாக 'ரன் அவுட்' என்று வகைப்படுத்தி, அதன் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றது. அஸ்வின் ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் வரலாற்றில் அவரது பெயர் பேசப்படும்போதெல்லாம், கிரிக்கெட் விதிகளையும், விளையாட்டு ஸ்பிரிட்டையும் குறித்த மிகப்பெரிய விவாதத்தை உண்டாக்கிய இந்த 'மன்கட்' சம்பவம் நிச்சயம் நினைவுகூரப்படும்.

Story first published: Wednesday, August 27, 2025, 12:39 [IST]
Other articles published on Aug 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+