பெங்களூரு: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய ஜாம்பவான் வீரர்களான அனில் கும்ப்ளே மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 410 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 94 பந்துகளில் 128 ரன்களும், கேஎல் ராகுல் 64 பந்துகளில் 102 ரன்களும் விளாசினர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அதேபோல் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜா உலகக்கோப்பை தொடரில் முக்கிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
10 ஓவர்களை வீசிய அவர் ஒரு மெய்டன் உட்பட 41 ரன்களை விட்டுக் கொடுத்து வான் டர் மெர்வ் மற்றும் மேக்ஸ் ஓ டவுத் ஆகிய 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலமாக ஒரு உலகக்கோப்பை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர்களில் ஜடேஜா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக 1996 உலகக்கோப்பை தொடரில் அனில் கும்ப்ளே 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அதேபோல் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தற்போது ஜடேஜா 9 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஜடேஜா 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதனால் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களுக்கு வழங்கப்படும் கோல்டன் பாலுக்கான ரேஸ் சூடுபிடித்துள்ளது. இதில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா வீரர் ஆடம் ஜாம்பா முதலிடத்தில் உள்ளார். இந்திய அணி வீரர்களில் பும்ரா 17 விக்கெட்டுகளை வீழ்த்தி 5வது இடத்திலும், 16 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி 8வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.