
மேக்ஸ்வெல் அபாரம்
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். வழக்கம் போல் ஆரம்பம் முதலே இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, அந்த அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தது. குறிப்பாக, படிக்கல் தொடக்கம் முதலே பஞ்சாப் பவுலர்களை விளாச ஆரம்பித்துவிட்டார். கோலி அடக்கி வாசிக்க, நல்ல ரிதம் கண்ட படிக்கல், மோசமான பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் விளாசினார். எனினும், 40 ரன்களில் வெளியேறினார் தேவ்தத் படிக்கல். அடுத்து களமிறங்கிய டேனியல்ஸ் கிறிஸ்டியன் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு கேப்டன் விராட் கோலியும் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஹென்றிக்ஸ் ஓவரில் கேட்ச்சானார். முதன் முதலாக இன்று பஞ்சாப் அணியில் களமிறங்கிய ஹென்ரிக்ஸ் இன்று 4 ஓவர்கள் வீசி, வெறும் 12 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் பிறகு டி வில்லியர்ஸ் - மேக்ஸ்வெல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில், மேக்ஸ்வெல் பஞ்சாப் பவுலர்களை விட்டு விளாசினார். 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால், அப்படியே குறைந்த ரன் ரேட்டை மேக்ஸ்வெல் உயிர்த்தெழ வைத்தார். டி வில்லியர்ஸ் உட்பட ஆர்சிபி அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், மேக்ஸ்வெல் இறுதிக் கட்டத்தில் அணியை மீட்டெடுத்தார். ஒருக்கட்டத்தில், 150 வருவதே சிரமம் என்றிருந்த நிலையில், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுக்க முக்கிய காரணமாக இருந்தார். 33 பந்துகளை சந்தித்து 57 ரன்கள் விளாசினார். இதில், 3 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடக்கம்.

மாயங்க் அரைசதம்
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல் - மாயங்க் அகர்வால் ஜோடி மிக அபாரமான பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்தியது. பெங்களூரு அணியின் அனைத்து பவுலர்களையும் இவர்கள் ஒரு கை பார்த்தனர். குறிப்பாக, ஷாபாஸ் ஓவரை சற்று அதிகமாகவே விளாசினார்கள். எனினும், அவர் ஓவரிலயே 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த லோகேஷ் ராகுல் கேட்ச்சானர். ஆனால், மறுபக்கம் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் மாயங் அகர்வால், அரைசதம் கடந்தார். பஞ்சாப் அணி, 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்த போது, நிகோலஸ் பூரன் வெறும் 3 ரன்களில் தூக்கி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

காணாமல் போன பந்து
இதன் பிறகு மேட்ச் அப்படியே பெங்களூரு பக்கம் திரும்பியது. நன்றாக ஆடிக் கொண்டிருந்த மாயங் 57 ரன்களிலும், சர்ஃபரஸ் கான் ரன் ஏதும் எடுக்காமலும் சாஹல் ஓவரில் அடுத்தடுத்து அவுட்டானார்கள். ஓரளவு செட்டாகி விளையாடிய எய்டன் மார்க்ரமும் 20 ரன்களில் சுமார் ஷாட்டில் கேட்ச்சாகி வெளியேற, அப்போதுதான் என்ட்ரி கொடுத்தார் தமிழக வீரர் ஷாருக் கான். கடைசி 2 ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. அதற்கு முன்னர், ஹர்ஷல் படேல் ஓவரில் ஒரு அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் சிக்ஸ் ஒன்றை ஷாருக் கான் விளாச, பந்து காணாமல் போனது.

ஆர்சிபி வெற்றி
சிராஜ் வீசிய 19வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்த ஷாருக், அதன் பிறகு பந்துகளை சரியாக க்ளீயர் செய்ய தவறினார். இதனால், கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. எனினும், கடைசி ஓவரின் முதல் பந்தில் ஷாருக் கான் ரன் அவுட்டாக, 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து சோகத்துடன் வெளியேறினார் ஷாருக். கடைசி ஓவரில் ஒரேயொரு சிக்ஸ் மட்டுமே அடிக்க முடிந்தததே தவிர, வெற்றிக்கான ரன்களை எடுக்க முடியவில்லை. கடைசி ஓவரில் 12 ரன்களே விட்டுக் கொடுக்க, பெங்களூரு 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று மூன்றாவது அணியாக பிளே ஆஃப் நுழைந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











