பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர் சி பி அணி தங்களுடைய கடைசி ஆட்டத்தில் குஜராத்திடம் தோல்வியை தழுவி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதன் மூலம் தொடர்ந்து மூன்று முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்ற ஆர் சி பி அணி தற்போது தொடரை விட்டு வெளியேறியது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர் சி பி கேப்டன் டுபிளசிஸ், இந்த தோல்வி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக கூறினார். இதை தொடர்ந்து பேசிய அவர் இன்று நாங்கள் ஒரு பலமான அணியை எதிர்கொண்டு தோற்று விட்டோம்.

சுப்மன் கில்லின் ஆட்டம் பிரமிக்க வைக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் மிகவும் ஈரமாக இருந்தது. எங்களுக்கு பந்தை பிடிக்க கூட முடியவில்லை. இதனால் நாங்கள் பந்தை அடிக்கடி மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். விராட் கோலியின் ஆட்டம் நினைக்க முடியாத அளவுக்கு சிறந்த இன்னிங்ஸ் ஆக அமைந்தது. இதன் மூலம் எங்களை அவர் வெற்றி பெறும் நிலைக்கு கொண்டு சென்றார்.
197 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் மிகவும் நல்ல இலக்கு தான். ஆனால் சுப்மன் கில்லும், பதிலுக்கு சிறப்பாக ஆடி எங்களிடம் இருந்து ஆட்டத்தை கவர்ந்து சென்று விட்டார். எங்கள் அணியின் பிரச்சனையே பேட்டிங் தான். டாப் 4 வீரர்கள் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. நடுவரிசையில் தொடர்ந்து யாரும் ரன்கள் சேர்க்கவில்லை.

ஒரு முறையாக இருந்தால் பரவாயில்லை, சீசன் முழுவதும் இதே நிலைதான் நீடித்தது. குறிப்பாக இறுதிக்கட்டத்தில் அதிரடியாக யாரும் ஆடவில்லை. கடந்த முறை தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி எங்களுக்கு பல்வேறு ஆட்டங்களை வென்று கொடுத்தார். ஆனால் இன்றைய சீசனில் அவரால் அப்படி செய்ய முடியவில்லை.
இது எங்களின் வெற்றியை மிகவும் பாதித்தது. இந்த தொடரில் வெற்றிகரமான அணிகளை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் வரும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன் சேர்ப்பார்கள். இன்றைய ஆட்டத்தில் நடு ஓவர்களில் கொஞ்சம் நாங்கள் விக்கெட்டை எடுத்து இருக்க வேண்டும். பேட்டிங்கில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. நிச்சயம் இது ஏமாற்றமான சீசனாக எங்களுக்கு அமைந்து விட்டது என டுபிளசிஸ் கூறியுள்ளார்.