பெங்களூரு: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தனியாளாக போராடி வந்த விராட் கோலி 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 56 ரன்களும், நிதிஷ் ராணா 48 ரன்களும் விளாசினார்.

பின்னர் ஆர்சிபி அணி சார்பாக டூ பிளஸிஸ் - விராட் கோலி இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. அதேபோல் கொல்கத்தா அணி சுழல் வலையை சுயஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தியை வைத்து ஆர்சிபி அணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பின்னியது. அந்த வலையில் ஆர்சிபி அணியின் டூ பிளஸிஸ், ஷாபாஸ் அஹ்மத், மேக்ஸ்வெல் ஆகியோர் பவர் பிளே ஓவர்கள் முடிவதற்கு சிக்கினர். இதனால் ஆர்சிபி அணி 6 ஓவர்கள் முடிவில் 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் ஒருபக்கம் அரணாக நின்று விராட் கோலி அதிரடியாக ஆடி வந்தார். அவருக்கு உதவியாக இளம் வீரர் லோம்ரோர் சில சிக்சர்களை விளாசி ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டார். இதன் காரணமாக விராட் கோலி 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி அடிக்கும் 5வது அரைசதம் இதுவாகும். அரைசதம் அடித்த விராட் கோலியை உற்சாகப்படுத்தும் வகையில் அவரின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா எழுந்து நின்று கை தட்டினார்.
இந்த நிலையில் நீண்ட நேரத்திற்கு பின் கொல்கத்தா அணி வேகப்பந்துவீச்சை அட்டாக்கில் கொண்டு வந்தது. ரஸ்ஸல் வீசிய 13வது ஓவரை அட்டாக் செய்ய நினைத்த கோலி, முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க முயன்றார். ஆனால் அந்த பந்து நேராக வெங்கடேஷ் ஐயர் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. இதனால் விராட் கோலி 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிவந்த விராட் கோலி ஆட்டமிழந்ததால், சின்னசாமி மைதானமே அமைதியாகியது.