புலவாயோ: ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 175 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஹசரங்கா 6 விக்கெட்டிகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
50 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து ஐக்கிய அரபு அமீரக அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற யுஏஇ கேப்டன் வசீம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின்னர் இலங்கை அணி தரப்பில் நிஷாங்கா - கருணரத்னே கூட்டணி களமிறங்கியது.

முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கருணரத்னே 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து நிஷாங்கா 57 ரன்களிலும் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த குஷால் மெண்டிஸ் - சவரவிக்ரமா கூட்டணி அதிரடியாக விளையாடியது. 3வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், குஷால் மெண்டிஸ் 78 ரன்களிலும், சமரவிக்ரமா 73 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 40 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 240 ரன்களை கடந்தது.
இதையடுத்து கடைசி நேரத்தில் களம் வந்த அசலங்கா 23 பந்துகளில் 48 ரன்களும், ஹசரங்கா 12 பந்துகளில் 23 ரன்கள் விளாசி அசத்தினர். இதனால் இலங்கை அணி 50 ஓவர்கல் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 355 ரன்கள் குவித்தது. 356 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரக அணிக்கு டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அந்த அணியின் கேப்டன் முகமது வாசிம் 39 ரன்களிலும், அரவிந்த் 39 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் வந்த வீரர்களில் ஷேஷாத் 26 மற்றும் நசீர் 34 ரன்கள் மட்டுமே எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இலங்கை அணி சார்பாக வனிந்து ஹசரங்கா 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரக அணி 39 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இலங்கைஅணி 175 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஹசரங்காவின் அபார பந்துவீச்சை பார்த்து ஆர்சிபி அணியின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஆர்சிபி அணிக்காக ஆடிய ஹசரங்கா அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததோடு விக்கெட்டுகளை வீழ்த்தவும் தவறியது ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு சரிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.