19 பந்துகளில் 18 ரன்கள்.. இதெல்லாம் ரொம்ப தப்பு விராட் கோலி.. தொடரும் ஸ்ட்ரைக் ரேட் பரிதாபங்கள்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஆர்சிபி அணியின் விராட் கோலி, 19 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் ஹசரங்கா, ஹேசல்வுட் ஆகியோர் நீக்கப்பட்டு பிரேஸ்வெல் மற்றும் பார்னல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆர்சிபி அணி சார்பாக டூ பிளஸிஸ் - விராட் கோலி இணை களமிறங்கியது. ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருந்ததால், இரண்டாவது ஓவரிலேயே ஆடம் ஷாம்பா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். இதனால் ஆர்சிபி அணி நிதானமாகவே பேட்டிங் செய்தனர். இதனைத் தொடர்ந்து அஸ்வின் மற்றும் சாஹல் ஆகியோரும் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டனர்.
இதனால் விராட் கோலி மற்றும் டூ பிளஸிஸ் அடக்கி வாசித்தனர். இதன் காரணமாக பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில் ஆசிஃப் வீசிய 7வது ஓவரில் விராட் கோலி 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஏனென்றால் தொடக்க வீரராக களமிறங்கி கிட்டத்தட்ட 3 ஓவர்களுக்கும் மேலாக விளையாடிவிட்டு 30 ரன்கள் கூட அடிக்காமல் 94.74 ஸ்ட்ரைக் ரேட்டில் விராட் கோலி ஆட்டமிழந்துள்ளார். கடந்த சில போட்டிகளாகவே விராட் கோலியின் ஆட்டம், 100 ஸ்ட்ரைக் ரேட் கடந்து செல்வதே ஆச்சரியமாக உள்ளது. இதனால் கேஎல் ராகுலை விமர்சிக்கும் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் விராட் கோலியை விமர்சிக்காமல் இருப்பது ஏன் என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications