ஐதராபாத்: ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் 7வது அரைசதத்தை விளாசி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நிதிஷ் ரெட்டி வீசிய பந்தில் விராட் கோலி அடித்த சிக்சர் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த ஐதராபாத் அணி கிளாஸினின் அதிரடியான சதம் காரணமாக 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை குவித்தது.

இதையடுத்து ஆர்சிபி அணி சார்பாக டூ பிளஸிஸ் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசி விராட் கோலி தொடங்கி வைத்தார். இதையடுத்து 2வது ஓவரை வீசிய அபிஷேக் சர்மா ஓவரிலும், 2 பவுண்டரிகள் விளாசப்பட்டது. தொடர்ந்து 4வது ஓவரை வீசிய கார்த்திக் தியாகி பந்துவீச்சில், டூ பிளஸிஸ் ஹாட்ரிக் பவுண்டரியை விளாசினார்.
தொடர்ந்து ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசப்பட, 6 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் சேர்த்தது. வழக்கமாக பவர் பிளே ஓவர்களுக்கு பின் ஆர்சிபி அணியின் ரன் ரேட் குறையும். ஆனால் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி ரன்கள் சேர்ப்பதில் தீவிரமாக இருந்தார். குறிப்பாக அறிமுகம் வீரர் நிதிஷ் ரெட்டி வீசிய 8வது ஓவரின் முதல் பந்தில் ஒரு இமாலய சிக்சரை விளாசி தள்ளினார்.

டீப் மிட் விக்கெட் திசையில் விராட் கோலி அடித்த இமாலய சிக்சர் 103 மீட்டர் தூரம் சென்று விழுந்தது. இந்த சிக்சரை ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் வாயடைத்து மிரட்சியுடன் பார்த்தார். டூ பிளஸிஸ் மட்டுமல்லாமல் மைதானத்தில் இருந்த ரசிகர்களும் விராட் கோலியின் சிக்சரால் மிரண்டு போயினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் 7வது அரைசதத்தை விளாசி அசத்தியுள்ளார்.