பெங்களூர்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 சிக்சர்களை விளாசினால், ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் 4 சிக்சர்களை அடித்தால், ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்களை விளாசிய இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார்.
ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடவுள்ளது. சின்னச்சாமி மைதானத்தில் நடக்கவுள்ள போட்டி என்பதால் ஆர்சிபி அணி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மீது ரசிகர்கள் அதிக கவனம் வைத்துள்ளனர். அதற்கு இந்த போட்டியில் 4 சிக்சர்களை விராட் கோலி விளாசினால், புதிய சாதனை ஒன்றை படைக்க முடியும்.

ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியல் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்க் முதலிடத்திக் இருக்கிறார். இதுவரை 141 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல், 357 சிக்சர்களை விளாசி இருக்கிறார். அதிலும் 2013 சீசனில் மட்டும் 59 சிக்சர்களை கெய்ல் பறக்கவிட்டார். இந்த 357 சிக்சர்களில் 127 சிக்சர்கள் சின்னச்சாமி மைதானத்தில் விளாசப்பட்டதாகும்.
இந்த பட்டியலில் மும்பை ஜாம்பவான் ரோஹித் சர்மா 2வது இடத்தில் இருக்கிறார். அவர் இதுவரை 256 இன்னிங்ஸ்களில் விளையாடி 282 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இந்த சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனென்றால் ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி 256 இன்னிங்ஸ்களில் விளையாடி 8,168 ரன்களை விளாசி இருக்கிறார்.
இந்த 256 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 278 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 4 சிக்சர்களை விளாசினால், ரோஹித் சர்மாவின் சாதனையை விராட் கோலியால் எளிதாக சமன் செய்ய முடியும். இந்த சீசனில் மட்டும் 4 போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி 2 அரைசதங்கள் உட்பட 164 ரன்களை விளாசி இருக்கிறார்.
ஆனால் ரோஹித் சர்மா இதுவரை 4 போட்டிகளில் விளையாடி வெறும் 38 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதனால் இந்த சீசனில் ரோஹித் சர்மாவின் சிக்ஸ் சாதனையை எளிதாக விராட் கோலியால் முறியடிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சோசியல் மீடியாவில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ரசிகர்கள் ஆவேசமாக மோதி கொள்வார்கள்.
தற்போது ரோஹித் சர்மாவின் சிக்சர் சாதனையை விராட் கோலி முறியடித்தால், சோசியல் மீடியா போர்க்களமாகவே மாறிவிடும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆர்சிபி அணி மிகவும் வலிமையாக இருக்கும் சூழலில், இந்த முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பும் அந்த அணிக்கு இருப்பதாக பார்க்கப்படுகிறது.