கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக முஜீப் உர் ரஹ்மான் விலகிய நிலையில், மாற்று வீரராக 16 வயது சிறுவனை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
அண்மையில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சார்பாக 17 வயதேயான மபாகா அறிமுகம் செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இந்த வீரர், யு19 உலகக்கோப்பை தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றனர். இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா ஏ அணியிலும் மபாகா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட மதுஷங்கா காயத்தால் விலகிய நிலையில், மாற்று வீரராக மபாகா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட மபாகா, 4 ஓவர்களில் 60 ரன்களை விட்டுக் கொடுத்து பின்னடைவை சந்தித்தார். இருப்பினும் 140 கிமீ வேகத்தில் மபாகா பவுலிங் செய்தது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றது.
இந்த நிலையில் மும்பை அணியின் பாணியில் கேகேஆர் அணியும் ஒரு வீரரை அழைத்து வந்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் சுனில் நரைனுக்கான பேக் அப் வீரராக முஜீப் உர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு என்ஓசி பிரச்சனை ஏற்பட்ட நிலையில், பின்னர் சமரசம் செய்யப்பட்டது. ஆனால் திடீரென காயமடைந்ததால், இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை தவறவிட்டார்.
தற்போது ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் கேகேஆர் அணி முஜீப் உர் ரஹ்மானுக்கான மாற்று வீரராக ஆஃப்கானிஸ்தானில் இருந்து 16 வயது சிறுவனை அழைத்து வந்துள்ளது. அல்லா கசன்ஃபர் என்று சிறுவன் ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதேபோல் 3 டி20 போட்டிகளிலும் விளையாடிய அனுபவம் கொண்டுள்ள இவர், கேகேஆர் அணிக்காக ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆஃப்கானிஸ்தானில் பிறப்பு சான்றிதழ் சர்ச்சைகள் இருப்பதால், அந்த அணியில் இடம்பெறும் வீரர்கள் பலரும் வயதை குறைத்தே சொல்லி வருகிறார்கள். ஏற்கனவே நூர் அஹ்மத், ரஷீத் கான் உள்ளிட்ட பலரும் வயது சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இருப்பினும் அல்லா கசன்ஃபரின் பவுலிங் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.