RCB vs SRH : ஐபிஎல் வரலாற்றிலேயே பிரம்மாண்ட ரெக்கார்டு.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மெகா சாதனை ஸ்கோர்
பெங்களூர் : 2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முந்தைய அதிக ஸ்கோர் சாதனையை முறியடித்து டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்தது.
மேலும், ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக ஸ்கோர் அடித்த அணிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் அணி, தனது முந்தைய சாதனையை தானே முடியடித்தது. ஐபிஎல் தொடரிலேயே இரண்டு முறை 250 ரன்களை கடந்து ஸ்கோர் குவித்த ஒரே அணி என்ற பிரம்மாண்ட சாதனையையும் செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் அசுர வேகத்தில் ரன் குவித்தார். 9 ஃபோர், 8 சிக்ஸ் அடித்த அவர் 39 பந்துகளில் சதம் கடந்தார். பின்னர் அவர் 41 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து கிளாசன் அதிரடியை தொடர்ந்தார். அவர் 2 ஃபோர், 7 சிக்ஸ் அடித்து 31 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். கடைசி நேரத்தில் ஸ்கோரை உயர்த்த களமிறக்கப்பட்ட அப்துல் சமத் 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அவர் 4 ஃபோர், 3 சிக்ஸ் அடித்தார். இப்படி அனைத்து பேட்ஸ்மேன்களும் வரிசையாக ரன் மழை பொழிந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது.
இதே 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்து இருந்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே அதுவே மிக அதிக ஸ்கோர் என்ற சாதனை அப்போது படைக்கப்பட்டது. தனது சாதனையை தானே முறியடித்த சன்ரைசர்ஸ் அணி தற்போது கூடுதலாக 10 ரன்கள் சேர்த்து 287 ரன்கள் குவித்தது.
ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் இதுவே இரண்டாவது பெரிய ஸ்கோர் ஆகும். நேபாள அணி, மங்கோலியா அணிக்கு எதிராக 314 ரன்கள் குவித்ததே டி20 வரலாற்றில் ஒரு அணி எடுத்த மிக அதிக ஸ்கோர் ஆகும். அதற்கு அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications