உலக கிரிக்கெட்டின் ராஜா.. வெஸ்ட் இண்டீஸ் சரிவுக்கு என்ன காரணம்.. இந்தியாவுக்கும் இதே நிலை வருமா?
பார்பிடாஸ் : உலக கிரிக்கெட்டின் ராஜா என்றால் அது வெஸ்ட் இண்டீஸ் தான். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சை பார்த்தாலே எதிரணி வீரர்கள் கதி கலங்கி விடுவார்கள்.
கிலைவ் லியாட், விவியன் ரிச்சர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஆன்ட்டி ராபர்ட்ஸ், மால்கம் மார்ஸ் என அந்த அணியின் வீரர்கள் அசுர பலத்துடன் இருப்பார்கள். இப்படி பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டிஸ் அணி 1975 உலகக் கோப்பை, 79 உலகக் கோப்பை 83 உலகக் கோப்பை இறுதிப்போட்டி என தொடர்ந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

ஆஸ்திரேலிய அணி 1999 இல் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை எந்த அளவுக்கு பலம் வாய்ந்ததாக இருந்ததோ அதைவிட இரட்டிப்பு மடங்கு பலம் வாய்ந்த அணியாக வெஸ்ட் இண்டீஸ் 20 ஆண்டுகளாக கோலோச்சியது. ஆனால் அப்படிப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது முதல் முறையாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாமல் போய்விட்டது. இதற்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் தங்களுடைய வீரர்களுக்கு போதிய அளவு சம்பளம் கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக அந்த அணியின் பிரபல வீரர்கள் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட கவனம் செலுத்தி வருகிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக காலம் முழுவதும் விளையாடி சம்பாதிக்கும் தொகையை ஒரு ஐபிஎல் சீசன் தொடரில் சம்பாதித்து விடலாம் என்பதால் அனைவரின் கவனமும் டி20 பக்கம் திரும்பி விட்டது.
இதனால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என எந்த போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர்கள் கவனம் செலுத்துவதில்லை. டி20யின் வருகைக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் பழைய அணியாக வலம் வந்தது. 2012 டி20 உலக கோப்பை ,2016 டி20 உலக கோப்பை என இரண்டு முறை உலக கோப்பையை வாங்கி அசத்தினார்கள். ஆனால் மீண்டும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பலரும் franchise கிரிக்கெட் நோக்கி சென்று விட்டார்கள்.
இதன் காரணமாக 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சரிவு தொடங்கிவிட்டது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறவில்லை. இதை போன்று 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி மெயின் சுற்றுக்கு வரவில்லை. தற்போது 2023 உலக கோப்பை தொடருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
எப்போது வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் நோக்கி சென்றதோ, அதிலிருந்து அவர்களுக்கு சரிவு தொடங்கி விட்டது. மேலும் நாட்டை விட பணம்தான் முக்கியம் என்றும் அவர்கள் சென்றது சரிவுக்கு காரணம். இதே நிலை இந்திய கிரிக்கெட் அணிக்கும் நிகழ வாய்ப்பு இருப்பதாக விமர்சகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டி 20 யில் அதிக காசு பார்க்கலாம் என வீரர்கள் டெஸ்ட் போட்டியை விட்டு விலகி வருவதால், கிரிக்கெட்டின் அடி நாதமே வெஸ்ட் இண்டீஸ் இல் அழிந்துவிட்டது.
இதேபோல நிலை இந்தியாவுக்கும் வரக்கூடும். இதை முன்கூட்டியே இந்தியா தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த நிலை மாற வேண்டும் என்றால் அவர்கள் தங்களுடைய வீரர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். தங்களுடைய ஸ்டார் வீரர்களை அணியில் வைத்திருக்க வேண்டும். அரசியலுக்கு இடம் கொடுக்கக் கூடாது நீ பெரியவனா நான் பெரியவனா என்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள அதிகாரப் போட்டியில் இந்த நிலைக்கு காரணம்.


Click it and Unblock the Notifications