'கோச்' அனில் கும்ப்ளே மீது பிசிசிஐக்கு ஏன் இவ்வளவு கோபம்?: வெளியான புது தகவல்கள்!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் அனில்கும்ப்ளே மீது பிசிசிஐ நிர்வாகம் கடும் கோபமடைந்துள்ளதற்கு வீரர்களுக்கான ஊதிய உயர்வு மட்டுமின்றி அவரின் வேறு சில கோரிக்கைகள்தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக உள்ள அனில்கும்ப்ளே பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இந்த நிலையில் இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி ஆட இங்கிலாந்துக்கு போயுள்ள இந்த நேரத்தில் திடீரென பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரியுள்ளது பிசிசிஐ.
இந்த தொடர் நிறைவடைந்த பிறகு இதுபோன்ற விண்ணப்பத்தை கோரியிருக்கலாம். அதை தவிர்த்து, அவசரமாக விண்ணப்பம் கோர வேண்டிய தேவை ஏன் வந்தது என்ற கேள்வி பல மட்டங்களில் எழுந்துள்ளது.

எரிச்சல்
அனில் கும்ப்ளே மீது பிசிசிஐக்கு உள்ள கோபம்தான் இதற்கு காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அனில்கும்ப்ளே வைத்த சில கோரிக்கைகள் பிசிசிஐக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பான பயிற்சி
கும்ப்ளே பயிற்சியாளரான பிறகு இந்திய அணியின் ஆட்டம் மேம்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற 13 டெஸ்ட் போட்டிகளில் 10ல் இந்தியா வென்றது. 2 டெஸ்ட் போட்டிகள் டிரா ஆகின. புனேயில் நடந்த ஒரு டெஸ்டில் மட்டும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது.

ஒருநாள் தொடர்களிலும் அசத்தல்
கும்ப்ளே பயிற்சியாளரான பிறகு, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது இந்தியா. இருப்பினும் கும்ப்ளேயின் கோரிக்கைகள்தான் பயிற்சியாளர் விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்க காரணம்.

ஊதிய உயர்வு
இந்திய அணியின் ஏ கிரேட் வீரர்களுக்கு 150 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கேப்டன் விராட் கோஹ்லியால் முன் வைக்கப்பட்ட நிலையில், அதை கும்ப்ளேயும் ஆமோதித்தார். நிர்வாகம் தரப்பில்தான் கும்ப்ளே இருந்திருக்க வேண்டும் என்ற கோபம் பிசிசிஐ நிர்வாகிகளுக்கு.

கேப்டனுக்கு கூடுதல் ஊதியம்
மேலும் கேப்டன் என்பவர் அதிக பொறுப்புகளை சுமப்பதால், ஊதியத்தில் கேப்டனுக்கு 25 சதவீதம் கூடுதல் தொகை வழங்க வேண்டும், வீரர்களை தேர்வு செய்யும் கமிட்டியில் பயிற்சியாளருக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்பது போன்றவை கும்ப்ளே கோரிக்கைகள்.

கோரிக்கைகளால் கடுப்பு
வீரர்கள் தேர்வின்போது 3 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்பது லோதா கமிட்டி பரிந்துரை. தற்போது கேப்டன், பயிற்சியாளர் போன்றோர் வீரர் தேர்வின்போது உடன் இருக்க முடியும். ஆனால் வாக்களிக்க முடியாது. கும்ப்ளே கோரிக்கை லோதா கமிட்டி பரிந்துரைக்கு எதிராக இருக்கிறது என்பது பிசிசிஐ குற்றச்சாட்டு. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளால்தான் கும்ப்ளே மீது பிசிசிஐக்கு கோபம் திரும்பியுள்ளதாம்.


Click it and Unblock the Notifications