சிட்னி: ரிக்கி பாண்டிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயற்கையான திறமை கொண்ட உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்தார். அந்த இரண்டுக்குமே அவர் சச்சின் டெண்டுல்கர் பெயரை சொல்லவில்லை. ஒப்பீட்டளவில் கூட சச்சின் பெயரை அவர் சொல்லவில்லை.
இதை அடுத்து ரிக்கி பாண்டிங் மனதில் வன்மத்தை வைத்துக் கொண்டு சச்சின் இயற்கையிலேயே சிறந்த பேட்ஸ்மேன், அதிக திறன் கொண்ட பேட்ஸ்மேன் என்பதை சொல்ல மறுத்து இருக்கிறார் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். 90 கள் மற்றும் 2000 மாவது ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் கிரிக்கெட்டில் கோலோச்சி வந்தனர்.

ஜேக்கஸ் காலிஸ் அவர்களுக்கு இணையாக டெஸ்ட் போட்டிகளில் ரன் குவித்ததோடு, பகுதி நேர வேகப் பந்து வீச்சாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக விளங்கினார். இவர்கள் நால்வருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளனர். ஆனால், சச்சின் டெண்டுல்கர் மற்ற மூவரை முந்தி ஒட்டுமொத்தமாக அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன், அதிக சதம் அடித்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.
பிரெட் லீ, ஷேன் வார்னே உள்ளிட்ட பல ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களே தாங்கள் பார்த்ததிலேயே சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தான் என கூறி உள்ளனர். ஆனால், எந்த சந்தர்ப்பத்திலும் ரிக்கி பாண்டிங், சச்சின் ஒரு சிறந்த வீரர் என்பதை சொன்னதே இல்லை. அதே விஷயம் தான் இப்போதும் நடந்து இருக்கிறது.
சமீபத்தில் அவரிடம் இயற்கையிலேயே அதிக திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர் மற்றும் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இரண்டு வீரர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறார். ஒன்று ஜேக்கஸ் காலிஸ். உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் முதன்மையானவராக இருந்த அவரை இயற்கையிலேயே அதிக திறன் கொண்ட கிரிக்கெட் வீரராக தேர்வு செய்தார் ரிக்கி பாண்டிங். அடுத்து பிரையன் லாராவை இயற்கையிலேயே திறமை வாய்ந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்தார்.
இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், "நான் பார்த்ததிலேயே இயற்கையிலேயே திறமை வாய்ந்த வீரர் என்றால் ஜாக்கஸ் காலிஸ் பெயரை தான் நான் சொல்வேன். ஏனெனில், அவர் ஆல் ரவுண்டராக இருந்தார். அவர் வெறும் பேட்ஸ்மேன் என்று நான் சொல்லவில்லை. அவர் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர் என்று சொல்கிறேன்." என்றார்.
"ஜேக்கஸ் 44 அல்லது 45 டெஸ்ட் சதங்களை அடித்து இருக்கிறார். 300 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அதற்கு மேலும் கூட அவர்கள் விக்கெட் வீழ்த்தி இருக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்ப முடியாத கேட்ச் ரெக்கார்டை வைத்துள்ளார்.
"எனவே, இந்த விளையாட்டை விளையாடியவர்களிலேயே மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் ஜேக்கஸ் காலிஸ் என்று நான் கருதுகிறேன். அவர் நிச்சயம் சிறந்த வீரர்களில் ஒருவர்தான். ஆனால், பலரும் அவரை தலைசிறந்த வீரர்களில் ஒருவராக வைத்து பேசுவதில்லை. ஆனால், எனது பார்வையில் அவர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அடுத்து இயற்கையிலேயே அதிக திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் என்றால் நான் பிரையன் லாராவை தான் சொல்வேன்." என்றார் ரிக்கி பாண்டிங்.