இளம் பெண் எம்.பி-யை கரம்பிடிக்கும் ரிங்கு சிங்.. திருமண தேதி, இடம் அறிவிப்பு.. லக்னோவில் கொண்டாட்டம்
லக்னோ: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜ் ஆகியோரின் திருமண தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் டிசம்பர் 4-ம் தேதி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
உத்தரபிரதேசத்தின் மச்லிஷகர் தொகுதி எம்.பி-யாக இருக்கும் பிரியா சரோஜுக்கும், இந்திய அணியின் அதிரடி ஃபினிஷரான ரிங்கு சிங்கிற்கும் கடந்த 2025 ஜூன் 8 அன்று லக்னோவில் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், டிசம்பர் 4 அன்று லக்னோவில் உள்ள ரமாடா ஹோட்டலில் திருமணம் நடைபெற உள்ளதாக இருவீட்டாரும் உறுதி செய்துள்ளனர். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ளன.

தங்களது காதல் கதை தொடங்கியது குறித்து ரிங்கு சிங் முன்னதாகப் பேசுகையில், "கொரோனா காலகட்டத்தில் மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடந்த போது, சமூக வலைதள பக்கத்தில் கிராமத்து தேர்தல் தொடர்பான பிரியாவின் புகைப்படத்தைப் பார்த்தேன். அவர் எனக்கு ஏற்ற துணை எனத் தோன்றியது. ஆனால் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்ப முதலில் தயங்கினேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பின்னர் எனது சில புகைப்படங்களை பிரியா லைக் செய்ததைப் பார்த்ததும் எனக்கு தைரியம் வந்தது. உடனே அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். அதன் பிறகு இருவரும் தொடர்ந்து பேசத் தொடங்கினோம். கடந்த 2022-ல் எங்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது" என்று ரிங்கு சிங் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
ஐபிஎல் போட்டிகளின் போது கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்திற்கு நேரில் வந்து ரிங்கு சிங்கிற்கு பிரியா சரோஜ் தொடர்ந்து உற்சாகம் அளித்து வந்தார். பல அரசியல் தலைவர்களும், இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களும் கலந்துகொள்ளவுள்ள இவர்களது திருமண செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீப காலமாக ரிங்கு சிங்கிற்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை. தற்போது நடைபெற்று வரும் இந்தியா - ஆப்கானிஸ்தான் டி20 தொடரிலும் ரிங்கு சிங் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

