மும்பை: இந்திய கிரிக்கெட்டின் இருபெரும் தூண்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்களா? என்ற கேள்விதான் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இருந்து இருவரது பெயர்களும் திடீரென காணாமல் போனதே இந்த அதிர்ச்சிக்குக் காரணம்.
இந்த சம்பவம், வெறும் தொழில்நுட்பக் கோளாறா அல்லது இந்திய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறதா என்ற பெரும் விவாதத்தை கிளப்பியது. நேற்று 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த நீக்கம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

புதன்கிழமை (ஆகஸ்ட் 20) ஐசிசி, பேட்ஸ்மேன்களுக்கான புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. கடந்த வாரம் வரை, இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 2-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் நீடித்து வந்தனர். ஆனால், இன்று வெளியான பட்டியலில் முதல் 100 இடங்களில் கூட இருவரது பெயர்களும் இடம்பெறவில்லை. இந்த செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
ரோஹித் மற்றும் கோலி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்நிலையில், தரவரிசைப் பட்டியலில் இருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டது, ஒருவேளை இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்களோ என்ற வதந்தியைப் பற்றவைத்தது.
"ஒரு சகாப்தம் முடிந்துவிட்டதா?", "பிசிசிஐ இருவரையும் ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்திவிட்டதா?" என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தத் தொடங்கினர். குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், ரோஹித் சர்மாவின் அபாரமான ஆட்டத்தால் இந்தியா 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வென்றதை ரசிகர்கள் நினைவுகூர்ந்தனர்.
ரசிகர்களின் பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு ஐசிசி தனது தவறைத் திருத்தியது. இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு (technical glitch) காரணமாக ஏற்பட்ட குழப்பம் எனத் தெரியவந்தது. திருத்தப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அதில் ரோஹித் சர்மா மீண்டும் 2-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் இடம்பெற்றனர்.
ஐசிசி இதுபோன்ற தவறுகளைச் செய்வது இது முதல் முறையல்ல. கடந்த 2023-ஆம் ஆண்டும் இதேபோன்ற ஒரு தொழில்நுட்பப் பிழையால், இந்திய அணி அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்ததாகத் தவறாகக் காட்டியது.
மொத்தத்தில், சில மணி நேரங்கள் நீடித்த இந்த நாடகம், ஐசிசியின் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதே தவிர, இந்திய ஜாம்பவான்கள் கோலி மற்றும் ரோஹித்தின் ஓய்வு அறிவிப்பு இல்லை என்பது உறுதியானது .