அடிதூள்.. ரோகித் - கோலி இணைந்து படைக்கும் உலக சாதனை.. 3வது ஒருநாள் போட்டியில் காத்துள்ள ட்ரீட்!
சென்னை: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது ஒருநாள் போட்டியின் போது இந்திய வீரர்கள் ரோகித் சர்மா - விராட் கோலி ஆகியோர் ஒன்றாக இணைந்து உலக சாதனை படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.
இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3வது ஒருநாள் போட்டி
முதல் போட்டியில் அபார வெற்றி கண்ட இந்திய அணி 2வது போட்டியில் படு மோசமாக சொதப்பியது. ஓய்வில் இருந்து வந்த கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களை மட்டுமே அடித்து வெளியேறினார். மறுபுறம் சற்று நம்பிக்கை தரும்படி ஆடிய விராட் கோலி 31 ரன்களுக்கு துரதிஷ்டவசமாக விக்கெட்டை பறிகொடுத்தார். எனவே 3வது போட்டியில் இவர்கள் இணைந்து ஒரு மேஜிக் செய்தால் மட்டுமே இந்திய அணி தப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சூப்பர் சாதனை
இந்நிலையில் இவர்கள் இருவரும் சாதனையை நோக்கியும் நகர்ந்து வருகின்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து இன்னும் 2 ரன்கள் அடித்தால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5000 ரன்களை குவித்த ஜோடி என்ற பெருமையை பெறுவார்கள். அவர்கள் இதுவரை 85 இன்னிங்ஸ்களில் ஒன்றாக ஆடி 4998 ரன்களை குவித்துள்ளனர். அவர்களின் சராசரி பார்ட்னர்ஷிப் 62.47 ரன்களாக உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை 18 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கின்றனர்.

இதற்கு முன் யார்?
தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான்களான கார்டன் கிரினிட்ஜ் மற்றும் டெஸ்மாண்ட் ஹெய்னஸ் ஆகியோர் தான் தற்போது வரை அதிவேகமாக 5000 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக உள்ளனர். இவர்கள் 97 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை குவித்தனர். இதில் சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால் 5000 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா ஏற்கனவே இடம் பிடித்துள்ளார். ஷிகர் தவானுடன் சேர்ந்து 112 இன்னிங்ஸ்களில் அடித்துள்ளார். தற்போது அதிவேகமாக அடித்த சாதனையை படைக்க காத்துள்ளார்.

அதிக பார்ட்னர்ஷிப்
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை இந்தியர்கள் தான் வைத்துள்ளனர். முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் சேர்ந்து 176 இன்னிங்ஸ்களில் ஒன்றாக ஆடி 8227 ரன்களை அடித்துள்ளனர். இந்த சாதனையை இன்று வரை யாராலும் முறியடிக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications