டோமினிக்கா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மாவும் ஜெய்ஸ்வாலும் இணைந்து 17 ஆண்டு கால ரெக்கார்டை உடைத்து இருக்கிறார்கள்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களில் சுருண்டது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கு என்ற உரித்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர்.

இந்த டெஸ்ட் இந்தியாவின் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. காரணம் புஜாரா இல்லாமல் களமிறங்கியுள்ள இந்திய அணியில் இதுவரை தொடக்க வீரராக விளையாடி வந்த சுப்மன் கில், மூன்றாவது இடத்தில் விளையாட உள்ளார். இதேபோன்று அறிமுக வீரராக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
இதனால் இந்த புதிய ஜோடி முதல் டெஸ்ட் ஆட்டத்தில் எப்படி செயல்பட போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தார்கள். 21 வயதில் தமக்கு ஏன் இந்திய அணியில் இடம் கிடைத்தது என்பதற்கு ஜெய்ஸ்வால் தன்னுடைய பேட்டிங் மூலம் இன்று நிரூபித்து காட்டியிருக்கிறார். ஆடுகளம் கடும் சவாலை அளித்தாலும், ஜெய்ஸ்வாலும் ரோகித்தும் லாவகமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர்.
இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்த நிலையில் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தடுமாறினர். ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி இணைந்து வெஸ்ட் இண்டீஸ் இன் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை கடந்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்று தந்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடிய இந்த ஜோடி 17 ஆண்டுகால சாதனையை தற்போது முறியடித்து இருக்கிறது.
அதாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் விக்கெட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற பெருமையை வசீம் ஜாபரும் சேவாக்கும் 2006 ஆம் ஆண்டு படைத்தார்கள். அந்தப் போட்டியில் சேவாக் -ஜாபர் ஜோடி 159 ரன்கள் சேர்த்திருந்ததே இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி அதனை கடந்து புதிய ரெக்கார்டை படைத்திருக்கிறார்கள். முதல் போட்டியிலேயே இந்த புதிய ஜோடி ரெக்கார்டு பிரேக்கிங் செய்திருப்பது இந்திய அணி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.