ஒருநாள் போட்டியின் போது தேசப்பற்றை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா.. அப்படி என்ன செய்தார்?
மும்பை : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியின் போது ரோஹித் சர்மா ரசிகர்களிடம் தன்னடக்கமாக நடந்து கொண்ட செயல் தற்போது வீடியோவாக பரவி வருகிறது.
நான்காவது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 224 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. முதலில் ஆடிய இந்தியா 377 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, அம்பதி ராயுடு அபாரமாக ஆடி சதம் அடித்தனர். இந்தியா பெரிய இலக்கை நிர்ணயிக்க காரணமாகவும் அமைந்தனர்.

ரோஹித் சாதனை சதம்
ரோஹித் சர்மா 137 பந்துகளில் 162 ரன்கள் அடித்து அசத்தினார். 20 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடித்த அவர் தன் ஏழாவது 150+ ரன்னை எடுத்தார். இந்த போட்டி நடைபெற்ற மும்பையின் சிசிஐ மைதானத்தில் தான் ரோஹித் தன் இளமைக் கால மும்பை போட்டிகளை ஆடியுள்ளார்.

சொந்த மண்ணில் ஆடிய ரோஹித்
தன் சொந்த மண்ணான மும்பையில் அசத்தல் சதம் அடித்து இருந்ததால், அங்கு இருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். அடுத்து இந்தியா பந்துவீசிக் கொண்டு இருந்த போது ரோஹித் சர்மா பவுண்டரி அருகே பீல்டிங் செய்ய சென்றார்.
“ரோஹித், ரோஹித்” வேண்டாம்
அப்போது அங்கே இருந்த ரசிகர்கள் "ரோஹித், ரோஹித்" என முழங்கினர். இதை கவனித்த ரோஹித் சர்மா, தன் பெயரை முழக்கமிட வேண்டாம். "இந்தியா, இந்தியா" என முழக்கமிடுங்கள் என அவர்களுக்கு புரியும்படி தன் அணிச் சீருடையில் இருந்த "இந்தியா" என்ற ஆங்கில எழுத்து வார்த்தையை குறிப்பிட்டு சைகை செய்தார்.

ரோஹித்தின் தேசப்பற்று
இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ரோஹித் தன்னடக்கத்துடன் நடந்து கொண்டார் என்றும், தேசப்பற்று கொண்டவர் என்றும் ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். ரோஹித் இந்த போட்டியில் 150 ரன்களை எட்டிய போது, இரட்டை சதம் அடிக்க வேண்டுமென்று ரசிகர்கள் ட்விட்டரில் கேட்டு வந்தனர். எனினும், ரோஹித் 162 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் இதுவரை மூன்று முறை ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications