IND vs ENG: "ஆட்டநாயகன்".. 38 வயதில் செய்யுற வேலையா இது.. மெய்சிலிர்த்த ரோஹித் சர்மா ரசிகர்கள்
கட்டாக்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிரடியாக சதம் விளாசி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். 38 வயதைக் கடந்த நிலையில் ரோஹித் சர்மா செய்து இருக்கும் வியக்க வைக்கும் புள்ளிவிவரங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்கள் குவித்தார். 305 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடி வந்த நிலையில், அதில் பெரும்பாலான ரன்களை அவர் அடித்ததால் அவருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது ரோஹித் சர்மாவின் 25வது ஆட்டநாயகன் விருதாகும். ஒருநாள் போட்டிகளில் மட்டும் அவர் 25வது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தியிருக்கிறார். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்றவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்து இருக்கிறார் ரோஹித் சர்மா.

கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்து ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் வியக்க வைக்கும் வகையில் உள்ளது. ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக விளையாடிய போட்டிகளில் மட்டும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 55.35 என்பதாகவும், ஸ்ட்ரைக் ரேட் 113.08 என்பதாகவும் உள்ளது.
கடந்த 15 ஒருநாள் போட்டி இன்னிங்ஸ்களில் மட்டும் ரோஹித் சர்மாவின் ஸ்கோர்கள் வரிசைப்படுத்தப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் இரண்டு சதங்களும், மூன்று அரை சதங்களும், நான்கு 40+ ரன்களும் அடங்கும். அந்த பட்டியல் - 119(90), 2(7), 35(20), 64(44), 58(47) , 47(31), 47(29), 61(54), 40(24), 4(2), 87(101), 46(40), 48(40), 86(63), 131(84).
இவற்றை பட்டியலிட்டு இருக்கும் ரசிகர்கள் ரோஹித் சர்மாவை வெகுவாக சிலாகித்து பாராட்டி வருகின்றனர். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக அவர் ஃபார்மை மீட்டிருப்பதால் இந்திய அணி நிச்சயமாக கோப்பை வெல்லும் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications