ஐசிசி தரவரிசை ரோகித் சர்மா நம்பர் 1 இடம்.. சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளினார்.. 38 வயதில் சாதனை
மும்பை: ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மா தன்னுடைய 38 வது வயதில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா மொத்தமாக 202 ரன்கள் அடித்திருந்தார். இதில் ஒரு சதம், ஒரு அரை சதம் அடங்கும். இதன் மூலம் ரோகித் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார்.

இதன் காரணமாக அவருடைய புள்ளிகள் 781 என்ற அளவில் உயர்ந்து இருக்கிறது. இதன் மூலம் முதலிடத்தில் இருந்த சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா முதலிடத்தில் பிடித்துள்ளார். ரோகித் சர்மா 781 புள்ளிகள் பெற்று உள்ள நிலையில், இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஷாட்ரான் உள்ளார்.
முதல் இடத்தில் உள்ள ரோகித்துக்கும் இரண்டாவது இடத்தில் உள்ள இப்ராஹிமுக்கும் 17 புள்ளிகள் வித்தியாசம் இருக்கிறது. இந்த நிலையில் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் தடுமாறிய கேப்டன் கில் 745 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகள் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்ததன் மூலம் சச்சின், தோனி, கோலி, கில் ஆகியோருக்கு பிறகு நம்பர் ஒன் வீரரான ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா இந்திய அணியில் தேவையில்லை. 2027 உலக கோப்பைக்கு ரோகித் விளையாட வேண்டாம் என பலரும் விமர்சித்து வந்த நிலையில் ரோகித் சர்மா தன்னுடைய பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்து நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார். இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 276 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா மொத்தமாக 11370 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் அவருடைய சராசரி 49.22 என்று அளவிலும்,ஸ்ட்ரைக் ரேட் 92.6 என்ற அளவில் இருக்கிறது. ரோகித் சர்மா 33 சதம், 59 அரை சதம் அடித்துள்ளார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் முறையாக ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கின்றார். ரோகித் சர்மா அடுத்ததாக வரும் நவம்பர் 30ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறார்.


Click it and Unblock the Notifications