மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா தன்னுடைய 37-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அதிரடி வீரராக அணிக்குள் வந்து பின்னர் தொடக்க வீரராக புரமோஷன் பெற்று பிற்காலத்தில் இந்திய அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக ரோகித் சர்மா விளங்குகிறார்.
இந்த நிலையில் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் கேப்டனாக ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றாலும், இந்திய அணியின் கேப்டனாக இதுவரை ஒரு முறை கூட உலக கோப்பையை வெல்லவில்லை. எந்த காரணத்திற்காக விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரோ தற்போது அதே காரணம் ரோகித் சர்மாவுக்கும் முன் வைக்கப்படுகிறது.

இதனால் தன்னுடைய 37வது பிறந்த நாளில் ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவால் ஒன்று காத்திருக்கிறது. அதாவது இந்திய அணியின் கேப்டனாக டி20 உலக கோப்பையை வெல்ல ரோகித் சர்மாவுக்கு தற்போது கடைசி வாய்ப்பு வந்திருக்கிறது. வரும் ஜூன் ஒன்றாம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றால் அது ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் கிரீடம் போல் ஜொலிக்கும்.
மேலும் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் இந்திய அணிக்கு ஒரு வரப் பிரசாதமாக அது அமையும். ஆனால் டி20 உலக கோப்பையை வெல்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. கடந்த முறை ரோகித் சர்மா அணி முயற்சித்தாலும் அரை இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவியது. தற்போது மீண்டும் தங்களுடைய அணியின் குறை நிறைகளை சரி பார்த்து அதற்கு ஏற்றார் போல் இந்திய அணியை வழிநடத்த வேண்டும்.
மேலும் ரோகித் சர்மா தொடக்க வீரராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 உலக கோப்பையில் ரன்களை சேர்க்க வேண்டும். ஒவ்வொரு அணியும் டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதன் தொடக்க வீரர்கள் கையில் தான் இருக்கிறது. மேலும் இந்தியாவின் பந்துவீச்சும் பும்ராவை தவிர சொல்லி கொள்ளும் அளவில் இல்லை. இதனை ரோகித் சர்மா எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
ரோகித் சர்மாவுக்கு இந்த ஆண்டில் காத்திருக்கும் இரண்டாவது மிகப்பெரிய சவால் என்றால் அது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர் தான். ரஹானே மற்றும் கோலி ஆகியோர் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற நிலையில் தற்போது ரோகித் சர்மா ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வாரா இல்லை தோல்வியை தழுவுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ரோகித் சர்மாவுக்கு இந்த ஆண்டு இந்த மிகப்பெரிய இரண்டு சவால்கள் காத்திருக்கிறது. ரோகித் சர்மா 2025 ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பையை விளையாடிவிட்டு அதன் பிறகு இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற வாய்ப்பு இருக்கிறது. தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை 2007 டி20 உலக கோப்பையை வென்று தொடங்கிய ரோகித் சர்மா பல சரிவுகளையும் உச்சத்தையும் தொட்டு இருக்கிறார். தற்போது மீண்டும் எங்கு தொடங்கினாரோ, அதே புள்ளியில் வந்து டி20 உலக கோப்பையை வென்று முடிப்பாரா என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.