புனே: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் நாளை இந்தியா பங்கேற்க உள்ள நிலையில் ரோகித் சர்மா செய்த ஒரு காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரோகித் சர்மாவுக்கு எப்படி ஆஃப் ஸ்பின் வீசுவது என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பயிற்சி கொடுத்தார். இந்தப் பயிற்சியின் போது ரோகித் சர்மா தொடர்ந்து ஓவர்களை வீசி வந்தார்.

இந்த நிலையில் ரோகித் சர்மாவை இந்த விஷப்பரிட்சையில் ஈடுபட வேண்டாம் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பல ரசிகர்கள் உலக கோப்பையில் பந்து வீசவேண்டும் என நீங்கள் முடிவெடுத்திருந்தால் அதற்கு முன்பு நடந்த பல இருதரப்பு தொடர்களில் பந்து வீசி ஒரு முயற்சி எடுத்து பார்த்திருக்கலாம். ஆனால் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இந்த விஷப்பரிட்சை வேண்டாம் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
ரோகித் சர்மா ஒன்றும் பந்து வீசுவதில் புதிய வீரர் கிடையாது. அவர் 254 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 8 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார். குறிப்பாக 2009 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 27 ரன்களை விட்டுக் கொடுத்து ரோஹித் சர்மா இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசியாக பந்து வீசி ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் ரோகித் சர்மா ஒரு ஓவர் வீசி 11 ரன்கள் விட்டுக் கொடுத்ததே கடைசியாகும். 2009 ஆம் ஆண்டு டி20 போட்டியில் மும்பை அணிக்கு எதிராக டெக்கான் சார்ஜஸ் அணிக்காக விளையாடுவது ரோகித் சர்மா ஒரு ஹாட்ரிக் விக்கெட்டையும் எடுத்திருக்கிறார்.ஆனால் சமீப காலமாக ரோகித் சர்மா பந்து வீசுவதை கிடையாது.
இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு பந்து வீசுவது என்பது மிகவும் தவறான ஒரு விஷயமாக போய் கூட முடியும். எனினும் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு அவர் சரியாக பந்து வீசுகிறார் என்ற நம்பிக்கை வந்தால் அதனை போட்டியில் செய்து பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை. ரோகித் சர்மாவுக்கு ஆரம்ப காலகட்டத்தில் கைவிரல்களில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவர் வந்து வீச்சு பக்கமே சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.