பவுலிங் கைவிட்டாலும் சூப்பராக தொடரை வென்றது இந்தியா... தேங்க்ஸ் ரோஹித்!
பெங்களூர் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவுக்கு பந்து வீச்சு கை கொடுக்காத நிலையில், பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா வென்றுள்ளது. குறிப்பாக பெங்களூரில் நேற்று நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா போட்ட அபாரமான இரட்டை சதம் இந்தியாவுக்கு தொடர் வெற்றியை உறுதி செய்தது.
பெங்களூரில் நேற்று நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா முதலில் ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 383 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா அணி 45.1 ஓவர்களிலேயே 326 ரன்ளுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியாவின் ரோஹித் சர்மா சரவெடியாகப் பொறிந்து தள்ளி 209 ரன்களைக் குவித்ததே இந்தியாவின் இமாலய ரன் குவிப்புக்கும், வெற்றிக்கும் முக்கியக் காரணம்.
நேற்று ஆஸ்திரேலியா 46வது ஓவரிலேயே ஆல் அவுட் ஆனாலும் கூட 326 ரன்கள் வரை வந்து விட்டனர். இந்திய பேட்ஸ்மென்கள் சிறப்பாக ஆடி, குறிப்பாக ரோஹித் போட்ட இரட்டை சதம்தான் இந்தியாவைக் காப்பாற்றி கரை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடியான தீபாவளிப் பரிசு
நேற்று நாடு முழுவதும் இந்தியர்கள் தீபாவளியைக் கொண்டாடினர். வெளியில் பட்டாசுகள் வெடித்து நொறுக்க, மைதானத்துக்குள் ரோஹித் கொண்டாடிய தீபாவளியை கிரிக்கெட் ரசிகர்கள் சிலாகித்து சிலிர்த்துப் பார்த்து ரசித்தனர்.

57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
நேற்றைய ஏழாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியை இந்தியா 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ரசிகர்களை குஷிப்படுத்தியது. மொத்தம் நடந்த 7 போட்டிகளில் இந்தியா மூன்றிலும், ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும் வென்றன.

அபாரமான ஆட்டம்
ரோஹித் சர்மாவின் ஆட்டம்நேற்று கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

இரட்டை சதம் போட்ட 3வது வீரர்
நேற்று அவர் போட்ட இரட்டை சதம் மூலம், இரட்டை சதம் போட்ட 3வது இந்திய வீரராக உருவெடுத்தார். இதற்கு முன்பு ஷேவாக் 219, சச்சின் 200 என இரட்டை சதங்கள் போட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் ஆரம்ப கட்ட பதிலடி
ஆஸ்திரேலிய அணி தனது சேஸிங்கின்போது இந்தியாவுக்கு கிலி ஏற்படுத்தும் வகையில்தான் ஆடியது. குறிப்பாக ஜேம்ஸ் பால்க்னர் 73 பந்துகளில் 116 ரன்களைக் குவித்தார். இதுதான் ஒரு நாள் போட்டியில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் அதி வேகமாக போட்ட சதமாகும்.

இந்தியப் பந்து வீச்சை நொறுக்கிய மேக்ஸ்வெல்
அதேபோல கிளன் மேக்ஸ்வெல் இந்திய பந்து வீச்சை தவிடு பொடியாக்கினார். 22 பந்துகளில் 60 ரன்களை அவர் குவித்தார். அதில் 7 சிக்ஸர்கள் அடக்கம்.

மேக்கேவுடன் சேர்ந்து பால்க்னர் குவித்த ரன்கள்
கிளின்ட் மேக்கேவுடன் இணைந்து பால்க்னர் 9வது விக்கெட்டுக்கு 115 ரன்களைக் குவித்தார். ஆனாலும் இவர்களின் முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை.

ரோஹித் படைத்த உலக சாதனை
முன்னதாக ரோஹித் சர்மா 158 பந்துகளில் 209 ரன்களைக் குவித்து புதிய உலக சாதனையைப் படைத்தார். மொத்தம் 16 சிக்ஸர்களையும், 12 பவுண்டரிகளையும் அவர் விளாசினார்.

ஆஸிக்கு எதிரான உயர்ந்தபட்ச ஸ்கோர்
மேலும் ரோஹித் எடுத்த ரன்கள்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை எடுக்கப்பட்ட ஸ்கோர்களிலேயே அதிகபட்சமாகும்.

இந்தியாவுக்கும் இதுதான் பெரிய ஸ்கோர்
மேலும் நேற்று இந்தியா எடுத்த 383 ரன்கள்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா குவித்த பெரிய ஸ்கோருமாகும்.

கடைசி 5 ஓவர்களில் 101 ரன்கள்
அதிலும் கடைசி ஐந்து ஓவர்களில் இந்தியா 101 ரன்களைக் குவித்து அசத்தியது.

7 போட்டி கொண்ட தொடரை வெல்வது முதல் முறை
மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா வெல்வதும் இதுவே முதல் முறையாகும்.

முதல் சதம் 114 பந்துகளில்.. 2வது சதம் 42 பந்துகளில்
ரோஹித் தனது முதல் சதத்தை 114 பந்துகளில் பெற்றார். ஆனால் 2வது சதத்திற்கு அவர் எடுத்துக் கொண்டது வெறும் 42 பந்துகள்தான்.

ஒவ்வொரு சிக்ஸரும் அதிரடி
அதைவிட முக்கியமாக அவர் போட்ட ஒவ்வொரு சிக்ஸரும் அதிரடியாக இருந்தது. அத்தனை சிக்ஸர்களையும், டீப் எக்ஸ்ட்ரா கவர் மற்றும் டீப் மிட் விக்கெட்டில் வைத்து தூக்கினார். அத்தனையும் ஸ்ட்ரெயிட் சிக்ஸர்களாகும்.

அந்தப் பக்கம் தவன், டோணி ஆட்டம்
ரோஹித் இப்படி ஒரு பக்கம் அடித்து நொறுக்க மறுபக்கம் ஷிகர் தவன் 60 ரன்களையும், கேப்டன் டோணி 38 பந்துகளில் 62 ரன்களையும் விளாசினர்.

ரோஹித்தும், டோணியும் சேர்ந்து 167 ரன்கள்
5வது விக்கெட்டுக்கு ரோஹித்தும், டோணியும் சேர்ந்து 167 ரன்களைக் குவித்தனர்.

கோஹ்லி ஏமாற்றம்
விராத் கோஹ்லி நேற்று டக் அவுட் ஆனார். அதேபோல யுவராஜ் சிங் 12, சுரேஷ் ரெய்னா 28 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

1000 ரன்களைக் கடந்த ரோஹித்
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் ரோஹித், இந்த ஆண்டில் ஒரு நாள் போட்டிகளில் நேற்று 1000 ரன்களையும் கடந்தார் ரோஹித்.


Click it and Unblock the Notifications