ரோகித் சர்மா தலை மீது கத்தியை தொங்கவிட்டால், அவரால் எப்படி ரன் குவிக்க முடியும்? சடகோபன் ரமேஷ் தாக்கு
மும்பை: ரோகித் சர்மா தலைமீது கத்தியை தொங்க விட்டால் அவரால் எப்படி சரியாக ரன்கள் குவிக்க முடியும் என இந்திய அணி நிர்வாகத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கடுமையாக சாடியிருக்கிறார். ரோகித் சர்மா இந்த தொடர் விளையாடுவதற்கு முன்பே இதில் அவர் சரியாக விளையாடவில்லை என்றால் நீக்கப்படுவார் என்ற எச்சரிக்கையுடன் தேர்வுக்குழு அனுப்பி இருந்தது.
இதனால் ரோகித் சர்மா பேட்டிங்கில் கடும் நெருக்கடியுடன் விளையாடுவது போல் தெரிந்தது. ரோகித் சர்மா தற்போது விளையாடிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாகவே சராசரியாக 18 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட் 54 என்ற அளவில் விளையாடியிருந்தார்.

அது மட்டும் இல்லாமல் நடப்பாண்டில் விளையாடிய 8 ஒரு நாள் போட்டிகளில் ரோகித் சர்மாவின் சராசரி 30 என்ற அளவில் இருக்கின்றது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், தலைமீது கத்தியை தொங்க விட்டு விளையாடு என்று சொன்னால் எந்த ஒரு வீரராலும் ரன்கள் சேர்க்க முடியாது.
இதுவே ஒரு தேர்வு குழு உறுப்பினரையோ, இல்லை பயிற்சியாளரையோ இந்த தொடரில் அணி சிறப்பாக செயல்பட்டால் தான் உங்களுடைய பணி தொடரும் என்று கூறினால் உங்களால் சரியாக செயல்பட முடியுமா? முடியாது. இதனால் தான் தேர்வு குழுவினருக்கும், பயிற்சியாளருக்கும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
எனவே ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்று ஒரு வீரர் குறித்து முடிவு எடுப்பதெல்லாம் மிகவும் தவறு. அதுவும் ரோகித் சர்மா போன்ற ஜாம்பவான்களுக்கு இது பொருந்தவே கூடாது. சூப்பர் ஸ்டார்களை பார்த்தாலே இந்த இந்திய அணி நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லை. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.
இந்த வீரர்கள் எல்லாம் ஒரு இரவில் சூப்பர் ஸ்டார் ஆனவர்கள் கிடையாது. கடந்த 15 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து, அணிக்காக சிறப்பாக செயல்பட்டு சூப்பர் ஸ்டார் ஆக மாறி இருக்கிறார்கள். எனவே அந்த சூப்பர் ஸ்டாருகளுக்கு அணி நிர்வாகம் மரியாதையை தர வேண்டும். 2023 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா எவ்வாறு சிறப்பாக விளையாடினார் என்பதை மறந்துவிட வேண்டாம்.
அணியின் நன்மைக்காக அதிரடியாக விளையாடி தனது விக்கெட்டை பணயம் வைத்தவர். அப்படி இருக்கும் ஒரு வீரரை நீங்கள் ரன் சேர்க்கவில்லை, என்றால் அணியை விட்டு நீக்கி விடுவோம் என்று அழுத்தம் கொடுப்பது மிகவும் தவறு. தென்னாப்பிரிக்கா ஆடுகளங்களில் பவுன்ஸ் நன்றாக இருக்கும். அதற்கு ரோகித் சர்மா சிறப்பான நபராக இருப்பார்.
ரோகித் சர்மா இல்லாமல் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் விளையாடினால், நஷ்டம் ரோகித் சர்மாவுக்கு கிடையாது. இந்திய அணிக்கு தான் என சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா இதுவரை 1575 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 60 ரன்களுக்கு மேலேயும், ஸ்டிரைக் ரேட் 105 என்று அளவிலும் இருக்கிறது. ரோஹித் சர்மா உலக கோப்பை வரலாற்றில் ஏழு சதங்கள் அடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications

