இனிமே இப்படிதான் ஆடுவேன்.. பேட்டிங் பிளானை மாற்றிய ரோஹித்.. இது மட்டும் நடந்தால் எதிரணிகள் காலி
மும்பை : ரோஹித் சர்மா தன் தனிப்பட்ட பேட்டிங் ஸ்டைலை மாற்றி இருப்பதாகவும், அதன் மூலம் மீண்டும் இரட்டை சதம் அடிக்க அவர் தயாராகி வருவதாகவும் முன்னாள் இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் சூசகமாக கூறி உள்ளார்.
ரோஹித் சர்மா ஏன் இப்போதெல்லாம் இரட்டை சதம் அடிப்பதே இல்லை. அட அதைக் கூட விடுங்க, அவர் ஏன் 2021க்கு பின் மிகக் குறைவாக சதம் அடித்து இருக்கிறார்?

இதற்கு காரணம் கேப்டன் பதவியை ஏற்ற பின் ரோஹித் சர்மா தன் ஆட்டத்தை மாற்றியது தான். இதைக் குறித்து தான் சஞ்சய் பங்கர் கூறி இருக்கிறார்.
முன்பு ரோஹித் சர்மா துவக்க வீரராக முதல் 30 ரன்களை சேர்க்கும் வரை நிதான ஆட்டம் ஆடுவார். அதன் பின் தான் அவரது ஆட்டம் வேகம் எடுக்கும்.
30வது ஓவரில் சதம் அடிப்பார். அதிர்ஷ்டம் இருந்தால் கடைசி 15 ஓவர்களுக்குள் தன் இரட்டை சதத்தை அடித்து இருப்பார். அவர் 30 ரன்கள் அடித்த பின் அவரை நிறுத்துவது கடினம் தான். ஆனால், 2021ஆம் ஆண்டு முதல் ரோஹித் சர்மா முதலில் இருந்தே நிதான ஆட்டம் ஆடும் பழக்கத்தை மாற்றினார்.
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளைப் போல இந்திய அணியும் துவக்கம் முதலே அதிரடி காட்ட வேண்டும் என முடிவு செய்த ரோஹித் சர்மா, முதல் இரண்டு ஓவர்களுக்குள் தன் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து விடுகிறார்.
அதன் காரணமாக அரைசதம் அடித்தாலும், அதை சதமாக மாற்றுவது கடினமாக மாறி விடுகிறது. ஆனால், இந்திய அணி மிடில் ஆர்டரில் இன்னும் நிலையான இடத்துக்கு வரவில்லை.
அதை உணர்ந்துள்ள ரோஹித் சர்மா, தான் நீண்ட நேரம் களத்தில் நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்து தன் பேட்டிங்கில் சில மாற்றத்தை செய்து அதை கடந்த ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் சூழ்நிலைக்கு ஏற்ப முயற்சி செய்தும் பார்த்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் சுப்மன் கில் தான் அதிரடி ஆட்டம் ஆடினார். ரோஹித் முதல் 10 ஓவர்கள் வரை நிதான ஆட்டமே ஆடினார். அதே போல, இலங்கை அணிக்கு எதிராகவும் நிதானமாக ஆடி பின் 20 ரன்கள் எடுத்த நிலையில் வேகம் எடுத்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 353 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தியதால் சூழ்நிலை காரணமாக துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
ஆக மொத்தத்தில், ரோஹித் சர்மா நிதானமாக தன் பேட்டிங் திட்டத்தை மாற்றி வருகிறார். உலகக்கோப்பை தொடரில் ஏதோ ஒரு போட்டியில் அவரது இந்த மாற்றம் அவருக்கு கை கொடுக்கும் பட்சத்தில் சதம், இரட்டை சதம் என எதிரணிகளை பந்தாடும் பழைய ரோஹித் சர்மா வந்து விடுவார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications