டோமினிக்கா : Ind vs WI test - இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதிய சைக்கிள் இந்தியா அடியெடுத்து வைக்கிறது.
தொடர்ந்து இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு சென்ற இந்திய அணி மூன்றாம் முறையாக பைனலுக்கு செல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனால் இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெல்ல வேண்டும். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா அணியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகம் ஆகுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் 21 வயதில் ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று சாதித்துள்ளார். கவாஸ்கரும் தனது 21 வது வயதில் தான் தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் எதிராக ஆடினார். தற்போது ஜெய்ஷ்வாலும் அதேபோல் செய்திருப்பதால் கவாஸ்கர் போல் அவரும் பெரிய வீரராக வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்துள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை தொடக்க வீரராக டெஸ்டில் களமிறங்க சுப்மன் கில்லுக்கு இனி மூன்றாவது இடம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் இந்திய அணியில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் பிளேயிங் லெவனனில் இடம் பெறுவார்கள் என்றும் ரோகித் சர்மா விளக்கம் அளித்தார். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஒரு ஸ்பின்னர் வைத்து இந்தியா ஆடியது தவறு என்று கூறப்பட்ட நிலையில் ரோகித் சர்மா அந்த தவறை திருத்திக் கொண்டு அஸ்வினுக்கு இடம் வழங்கி இருக்கிறார்.
எனினும் பிளேயிங் லெவன் குறித்து ரோகித் சர்மா இதுவரை அறிவிக்கவில்லை. ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கியது குறித்து பேசிய ரோஹித் சர்மா திறமை வாய்ந்த ஜெயஸ்வால் அணிக்குள் வந்ததன் மூலம் வலது கை இடது கை பேட்ஸ்மேன்கள் தொடக்க வீரராக களமிறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் தற்போது குறைவாக இருப்பதாக குறிப்பிட்ட ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் அந்த இடத்தை பூர்த்தி செய்வார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்படும் என்பதால் இரண்டு ஸ்பின்னர்கள் வைத்து களமிறங்குவதாக குறிப்பிட்டுள்ள ரோகித் சர்மா மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெறுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் சீனியர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து டெஸ்ட் போட்டியில் அணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என்றும் ரோஹித் சர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.