பார்படாஸ்: டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த தொடர் முழுக்க ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியே வந்து இருக்கிறது. இந்த உலகக் கோப்பையை வென்றதன் மூலம் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 3 முக்கிய ரெக்கார்டுகளை படைத்துள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி பார்படாஸில் நேற்று நடைபெற்றது. அதில் இறுதிப் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட நிலையில், அதில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

முதலில் இந்திய அணி 176 ரன்களை எடுத்தது. கோலி, அக்சர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்தியா வெற்றி: கடந்த 2007ஆம் ஆண்டில் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்று இருந்தது. அதன் பிறகு இப்போது தான் 2ஆவது முறையாகக் கோப்பையை வெல்கிறது. இந்த வெற்றியின் மூலம் ரோஹித் ஷர்மா 3 முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா.. சட்டென பண்ட் செய்த அந்த ஒரு செயல்.. ஆட்டத்தை மாற்றியதே அதுதான்
சாதனை 1: டி20 போட்டிகளில் 50 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். இதுவரை எந்தவொரு நாட்டின் கேப்டனும் சர்வதேச டி20 போட்டிகளில் 50 வெற்றிகளை பதிவு செய்ததே இல்லை. ரோஹித் ஷர்மா கடந்த 2021இல் முதலில் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் 61 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். அதில் 50 போட்டிகளில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன் மூலம் அவரது வெற்றி சதவீதத்தை 78ஐ தாண்டியுள்ளது.
சாதனை 2: தனிப்பட்ட முறையிலும் இந்த வெற்றி ரோஹித் ஷர்மாவுக்கு முக்கியமானது.. அவர் எந்த ஐசிசி டிராபியையும் வென்றதில்லை என்ற விமர்சனம் இருந்த நிலையில், அதை அவர் துடைத்து எறிந்துள்ளார். இதில் சாதனை என்னவென்றால்.. டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார்..
இதற்கு முன்பு இந்திய அணி கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. அப்போது எம்எஸ் தோனி இந்திய அணியை வழி நடத்தி இருப்பார். அந்த உலகக் கோப்பை தொடரில் 20 வயதான ரோஹித் ஷர்மா பங்கு இந்திய வெற்றிக்கு முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக இறுதிப் போட்டியில் பின் வரிசையில் களமிறங்கிய ரோஹித் 16 பந்துகளில் 30 ரன்களை எடுத்தார். இந்திய அணியின் வெற்றிக்கு அவரது இந்த ஆட்டம் முக்கியமானதாக இருந்தது.
சாதனை 3: அதேபோல ஒரு டி20 உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளையும் வென்ற அணியை வழிநடத்திய கேப்டன் என்ற சிறப்பையும் ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார். லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளை இந்தியா வீழ்த்திய நிலையில், கனடா உடனான கடைசி லீக் போட்டி மழையால் ரத்து ஆனது.
தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியாவை ரோஹித் படை வீழ்த்திய நிலையில், அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அதேபோல நேற்று நடந்த இறுதிப் போட்டியிலும் இந்தியா கலக்கலாக ஆடி வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 100% வெற்றியுடன் கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை ரோஹித் படைத்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2007இல் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது, லீக் சுற்றில் இந்தியா ஒரு போட்டியில் தோல்வி அடைந்து இருக்கும். நியூசிலாந்துக்கு எதிரான லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனால், இந்த முறை ஒரு தோல்வி கூட இல்லாமல் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார் ரோஹித்.