Rohit Sharma: "பொய்யான செய்திகளை நம்பாதீர்கள்.. இராணுவத்தின் நடவடிக்கை பெருமையாக இருக்கிறது"
மும்பை: இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து பெருமைப்படுவதாகவும், இந்திய ராணுவத்தின் முக்கியத்துவத்தை குறித்தும் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாத குழுக்கள் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.

இந்த நிலையில், இந்திய ராணுவம் மிகச்சிறப்பாக இந்தத் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது. அதைப்பற்றி ரோகித் சர்மா பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்தப் பதிவில், "'ஒவ்வொரு தருணமும் கடந்து செல்லும் போது, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை எடுக்கும் ஒவ்வொரு முடிவும் எனக்கு அதிகப்படியான பெருமை அளிப்பதாக உள்ளது. நமது வீரர்கள் நாட்டின் பெருமையை உயர்த்திப் பிடிப்பவர்களாக உள்ளனர். பொய்யான செய்திகளை நம்புவதையும், பரப்புவதையும் தடுத்து நிறுத்துவது ஒவ்வொரு இந்தியனின் பொறுப்புமிக்க கடமையாகும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'" என்று பதிவிட்டு இருக்கிறார் ரோகித் சர்மா.
அவரது பதிவை பலரும் வரவேற்றுள்ளனர். பலரும் ரோகித் சர்மாவைப் பாராட்டி வருகின்றனர். அதே சமயம் சிலர், மிகத் தாமதமாக ரோகித் சர்மா இந்தப் பதிவை வெளியிட்டு இருக்கிறார் என அவரை விமர்சித்து வருகின்றனர். முன்னதாக முன்னாள் இந்திய வீரர் அம்பதி ராயுடு, 'ஒரு கண்ணுக்கு ஒரு கண் என சென்றால், மொத்த உலகமும் இருட்டாகிவிடும்' என மகாத்மா காந்தியின் கூற்றைச் சுட்டிக்காட்டி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதாவது நமது நாடும், பாகிஸ்தானும் ஒருவரை மாற்றி மாற்றி தாக்கிக் கொள்ளக் கூடாது, அதனால் பாதிப்பு அதிகரிக்கும் என்ற ரீதியில் அவரது பதிவு அமைந்திருந்தது. ஆனால், அது சமூக வலைதளத்தில் கடும் எதிர்வினையைக் கிளப்பி இருந்தது. பலரும் அம்பதி ராயுடுவை 'துரோகி' எனவும், முட்டாள்தனமான கருத்தைத் தவறான நேரத்தில் கூறி இருப்பதாகவும் சுட்டிக்காட்டி அவரை விமர்சித்து இருக்கின்றனர். இந்த நிலையில் ரோகித் சர்மாவின் பதிவு வெளியாகி உள்ளது.
முன்னதாக 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத இருந்த லீக் போட்டி தரம்சாலாவில் 10.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, முன்னெச்சரிக்கையாக அந்தப் போட்டி நிறுத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications