“ஹிட்மேன் எல்லாமே முடிஞ்சு போச்சு”.. ஜாம்பவான் ரோஹித்தின் வீழ்ச்சி.. இனி உலகக்கோப்பை ஆட வாய்ப்பில்லை
கார்டிஃப்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் ஒருநாள் போட்டியில் சரியாக ரன் குவிக்காத அவர், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆமை வேகத்தில் ஆடி மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 21 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த ரோஹித் சர்மா, கார்டிஃபில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் ஏமாற்றமே அளித்தார். இந்தப் போட்டியில் 47 பந்துகளை எதிர்கொண்ட அவர், வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்துத் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவரது வழக்கமான அதிரடி ஆட்டம் மற்றும் ஸ்டிரைக் ரேட் முற்றிலுமாகச் சரிந்துள்ளதால், அவர் இனியும் அணியில் நீடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது 39 வயதாகும் ரோஹித் சர்மா, ஏற்கனவே சர்வதேச டி20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர், தற்போதைய ஃபார்ம் மற்றும் வயது காரணமாக 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.
2027 உலகக் கோப்பையின் போது அவருக்கு 41 வயதாகிவிடும் என்பதால், இந்த இங்கிலாந்து தொடரே அவரது சர்வதேச வாழ்க்கையின் கடைசி ஒருநாள் தொடராக அமைய வாய்ப்பு உள்ளது. ரோஹித் சர்மாவை போன்றே 2027 உலகக்கோப்பையில் ஆடும் முயற்சியில் இருக்கும் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்தார். எனவே, அவரது வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் மற்றும் 264 ரன்கள் என்ற உலக சாதனையைப் படைத்த மாபெரும் 'ஹிட்மேன்' ரோஹித்தின் இந்த திடீர் வீழ்ச்சி இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

