தேர்வுக்குழு மெசேஜால் ஆத்திரமடைந்த 'ஹிட்மேன்'.. ரோஹித்தை வெளியேற்ற நடந்த திரைமறைவு வேலைகள்
மும்பை: இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மாவை டெஸ்ட் போட்டியை போல, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற வைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் நடந்ததாகவும், இந்த சம்பவங்களால் அவர் கடும் ஆத்திரமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) உயர்மட்ட கூட்டத்திற்கு முன்னதாக இந்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோஹித் சர்மா ஏற்கனவே 2024ல் டி20 போட்டிகளில் இருந்தும், 2025ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை என்று தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் அவரிடம் தெரிவித்துள்ளார். மேலும், லார்ட்ஸ் ஒருநாள் போட்டிக்குப் பிறகு அவர் ஓய்வை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த போதும், ரோஹித் அதற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், லார்ட்ஸ் போட்டியில் ரோஹித் சர்மா 138 ரன்கள் குவித்து அதிரடி காட்டியதால் இந்த வதந்திகளுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால், இந்த ஒரு சதம் மட்டுமே 2027 உலகக்கோப்பை அணியில் ரோஹித் சர்மாவின் இடத்தை உறுதி செய்யாது என்று பிசிசிஐ வட்டாரம் கூறுகிறது.
முன்னதாக, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாகப் பேசியது, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பிசிசிஐ-க்கும் தேர்வுக்குழுவிற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.
மும்பையில் இன்று (செப்டம்பர் 3) நடைபெறும் பிசிசிஐ-யின் அவசரக் கூட்டத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அதோடு, அஜித் அகர்கரின் பதவிக்காலம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. தேர்வுக்குழு தலைவராக 2027 உலகக்கோப்பை வரை அஜித் அகர்கர் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய சர்ச்சையால் அவரது பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக வி.வி.எஸ்.லக்ஷ்மணை புதிய தேர்வுக் குழு தலைவராக நியமிக்கவும் பிசிசிஐ பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications
