சிக்சர் பந்தில் அடிபட்ட ரசிகைக்கு பரிசாக வந்த தொப்பி.. சாதனை வீரரின் நெகிழ வைக்கும் சம்பவம்
எட்ஜ்பாஸ்டன்: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தாம் அடித்த சிக்சர் பந்தால் காயம்பட்ட ரசிகைக்கு ரோகித் சர்மா தொப்பியை பரிசளித்தார்.
நேற்று பர்மிங்காமில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் விளையாடின. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தமது 26 சதத்தை பதிவு செய்தார். 50 ஓவர்களில் இந்திய அணி 314 ரன்கள் குவித்தது.
போட்டியின் போது ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்தது. ரோகித் ஷர்மா 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் விளாசி தள்ளினார். அந்த சிக்சர்களில் ஒரு சிக்சர் அடித்த போது, அந்த பந்து மீனா என்ற ரசிகை மீது பட்டது. இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. எனினும் அவருக்கு காயம் எதுவும் பெரிதாக ஏற்படவில்லை. அதனை தொடர்ந்து போட்டி முடிந்த பின்னர், ரோகித் சர்மா அந்த பெண் மீனாவை சந்தித்தார்.

நலம் விசாரிப்பு
அப்போது ரோகித் ஷர்மா மீனாவிடம் நலம் விசாரித்தார். அத்துடன் தனது கையெழுத்து போடப்பட்ட தொப்பியையும் பரிசாக வழங்கினார். இந்தச் சம்பவம் ரசிகையான மீனாவை நெகிழ செய்தது.

87 வயது ரசிகை
இதே போட்டியில் மற்றொரு ஆச்சர்யதக்க சம்பவமும் நடந்தது. அதிரடியாக ரோகித் சர்மா விளையாடிய போது, மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளந்தது. அப்போது, ஒரே ஒரு ரசிகை மட்டும், சமூக வலைத்தளம் மட்டுமல்லாது செய்தி ஊடகங்களிலும் ட்ரெண்டானார்.

ஆசிர்வாதம்
சாருலதா என்ற 87 வயது ரசிகை, தேசிய கொடியினை முகத்தில் வரைந்து கொண்டும், பீப்பி ஊதி வீரர்களை உற்சாகப்படுத்தினார். போட்டிக்கு பின்பு மூதாட்டி சாருலதாவை சந்தித்த ரோகித் சர்மா அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார். ரோகித்தை ஆரத்தழுவிய மூதாட்டியும் அவருக்கு ஆசை முத்தங்களை வழங்கினார்.

இந்தியா வெற்றி
இந்த போட்டியில், வங்கதேச அணி 48 ஓவரில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எனவே, இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 13 புள்ளிகளை பெற்ற இந்தியா 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.


Click it and Unblock the Notifications